புஷ்பா 2 படத்துக்கு பொங்கல் வச்சிட்டாய்ங்களே.. வியாபாரமே பெருசா ஆகலையா?.. இப்படி ஆகிடுச்சே?
ஹைதராபாத்: பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை பான் இந்தியா அளவில் கொடுத்து வந்த நிலையில், பலரும் அதை நம்பி மேலும் பல நூறு கோடி அதிகம் செலவு செய்து புதிய படங்களை எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு திடீரென சினிமாவுக்கு ரசிகர்கள் கூட்டம் வருவது பாதியாக குறைந்து விட்டது.
ஓடிடி ஒருபுறம் என்றால் சொதப்பல் படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கி வருகின்றன. பாலிவுட்டில் வெளியான படங்களே இந்த ஆண்டு பெரிதாக வசூல் வேட்டை நடத்தாத நிலையில், தென்னிந்திய படங்கள் இந்தி பெல்ட்டை குறி வைத்து இறக்கினால் பலத்த அடி வாங்கும் நிலைமை தான் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இந்த ஆண்டு இந்தியில் வெளியான மைதான், படே மியான் சோட்டே மியான், ஃபைட்டர் உள்ளிட்ட படங்கள் பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
பிரபாஸின் கல்கி: வரும் ஜூன் 27-ஆம் தேதி பிரபாஸ் நடித்துள்ள கல்கி திரைப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கு மற்றும் இந்தியை இந்த முறை அதிகம் நம்பி இருக்கிறார் நாக் அஸ்வின். சமீபத்தில் வெளியான கல்கி டிரைலர் எதிர்பார்த்த அளவுக்கு தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலேயே ஏகப்பட்ட மில்லியன் வியூஸை குவிக்கவில்லை. தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சுமாரான வியூஸ் தான் பெற்றுள்ளது. அந்த படத்திற்கு ஓவர் சீஸில் உள்ள ஹைப் கூட இந்தியாவில் இல்லை என்கின்றனர். அதன் வசூல் நிலவரம் குறித்து அறிந்த நிலையில், புஷ்பா 2 படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிடலாமா? வேண்டாமா என்கிற முடிவில் படக்குழுவினர் இருப்பதாக கூறுகின்றனர்.
புஷ்பா 2 தள்ளிப்போகுதா?: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
பிசினஸ் இல்லை: ஓவர் ஹைப்புடன் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தை பார்க்க டோலிவுட் ரசிகர்களை தாண்டி பாலிவுட்டில் கூட யாருமே அந்த படத்திற்கு ஆர்வம் காட்டாத நிலையில் தான் படக்குழு தற்போது ரிலீஸ் செய்யலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் தடுமாறி வருவதாக கூறுகின்றனர். இந்த ஆண்டு பல படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை மாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கல்கி படம் மே 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஜூன் 27ம் தேதிக்கு தள்ளிப் போன நிலையில், புஷ்பா 2 படமும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிப் போகும் நிலை உருவாகும் என்கின்றனர்.
கோட் உடன் மோதுமா?: தளபதி விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5 ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், புஷ்பா 2 தள்ளிப் போனால் கோட் படத்துடன் மோதும் அபாயமும் உள்ளதாக கூறுகின்றனர். ஆனால், எப்படி இருந்தாலும் கிளாஷ் வராது என்றும் செப்டம்பர் கடைசிக்கு புஷ்பா 2 தள்ளிப் போகும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











