ராம் சரணுக்கு வழிவிட்ட அல்லு அர்ஜுன்.. புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் ரிலீஸ் தேதியில் அதிரடி மாற்றம்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்துக்கு வேட்டு வைக்கும் விதமாக புஷ்பா 2 படத்தின் ரீலோடட் வெர்ஷனை ஜனவரி 11ம் தேதி இறக்கப் போவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகி ஆந்திரா ரசிகர்களை ஆட்டம் காண வைத்தது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ராவ் ரமேஷ், ஜகபதி பாபு, பகத் பாசில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடித்த புஷ்பா 2 திரைப்படம் 1831 கோடி ரூபாய் வசூலை கடந்து நம்பர் ஒன் தெலுங்கு படமாக மாறியுள்ளது. பாகுபலி 2 வசூலை முறியடித்த நிலையில், அடுத்ததாக அமீர்கானின் தங்கல் பட வசூலையும் முறியடிக்க ரீலோடட் வெர்ஷனை இறக்க காத்திருக்கிறது.

ஏற்கனவே கேம் சேஞ்சர் படத்துக்கு எந்த இடத்திலும் ஹைப் இல்லாத நிலையில், புஷ்பா 2 படம் போட்டிக்கு வந்தால் என்ன ஆகுமோ என்கிற நிலையில், பேச்சுவார்த்தையில் தில் ராஜு ஈடுபட்டு இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே தற்போது ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர் என்றும் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன்: ஏற்கனவே 3 மணி நேரம் 16 நிமிடங்கள் புஷ்பா 2 படம் தியேட்டர்களில் ஓடி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தமிழில் வெறும் 70 கோடி வசூலுடன் பிரேக் ஈவன் ஆகாமல் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு பலத்த அடி என்று பேச்சுக்கள் வெளியாகின. ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் பெரிய லாபம் இல்லை என்றாலும், இந்தியில் மட்டுமே 800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து 1831 கோடி என பாகுபலி 2 வசூலை புஷ்பா 2 முறியடித்தது. இந்நிலையில், வரும் ஜனவரி 11ம் தேதி மேலும், 20 நிமிடக் காட்சிகளை சேர்த்து புஷ்பா 2 ரீலோடட் வெர்ஷன் வரும் என அறிவித்தனர்.
ராம் சரணுக்கு வழிவிட்ட அல்லு அர்ஜுன்: ஏற்கனவே டோலிவுட்டில் பாலகிருஷ்ணாவின் டாக்கு மகாராஜ் படம் பலத்த போட்டியாக உள்ள நிலையில், புஷ்பா 2வும் வந்தால் டோலிவுட்டிலும் கேம் சேஞ்சர் படம் வசூல் குவிக்காது என்கிற நிலை உருவாகியுள்ளதால் தற்போது ராம் சரணுக்காக அல்லு அர்ஜுன் ஜனவரி 17ம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை எல்லாம் முடிந்து ரீலோடட் வெர்ஷனை ரிலீஸ் செய்ய சம்மதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இன்சைட் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. படத்தின் ரீலோடட் வெர்ஷனுக்கான பணிகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2000 கோடி இலக்கு: இந்திய சினிமா நடிகர்களிலேயே நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முடிவுடன் தான் அல்லு அர்ஜுன் புஷ்பா 2வை கையில் எடுத்தார். 300 கோடி சம்பளம் வாங்கி அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாறிய நிலையில், அமீர்கானின் தங்கல் படத்தின் 2000 கோடி சாதனையை முறியடிக்க ரீலோடட் வெர்ஷன் யுக்தியை கையில் எடுத்துள்ளார். பாலிவுட்டில் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2வை ஒருநாள் முழுவதும் ஓட்டினால் கூட ரசிகர்கள் பார்க்க ரெடியாக உள்ள நிலையில், நிச்சயம் இன்னும் ஒரு 150 கோடி வசூல் வந்தால் அந்த சாதனை முறியடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











