நேரம் -பிரேமம் மாதிரியான படத்தை என்னிடம் எதிர்பார்க்காதீங்க.. வைரலாகும் அல்போன்ஸ் புத்ரன் பதிவு!
சென்னை :நேரம், பிரேமம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்.
நேரம் என்ற படத்தை தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரேமம் என்ற படம் வெளியானது
இந்தப் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பாட்டு என்ற படத்தை அறிவித்தார். ஆனால் இந்தப் படத்தை தள்ளி வைத்துவிட்டு தற்போது கோல்ட் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

நேரம் -பிரேமம் படங்கள்
நேரம் என்ற சிறப்பான என்டர்டெயினரை வெளியிட்டு சிறப்பான இயக்குநர் என்ற பெயரை பெற்ற மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி பிரேமம் என்ற படம் வெளியானது. மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் இந்த இரு படங்களும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படங்களை தொடர்ந்து தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்தார் அல்போன்ஸ் புத்ரன்.

கைவிடப்பட்ட பாட்டு படம்
இதனிடையே கடந்த 2020ம் ஆண்டில் பகத் ஃபாசில் மற்றும் நயன்தாரா நடிப்பில் பாட்டு என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் அல்போன்ஸ் புத்ரன். ஆனால் இந்தப் படம் அறிவிப்போடு நின்றது. இதையடுத்து கோல்ட் படத்தை பிரித்விராஜ் மற்றும் நயன்தாராவை லீட் ரோலில் வைத்து இயக்கி முடித்துள்ளார் அல்போன்ஸ். இந்தப் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது.

தள்ளிப் போன ரிலீஸ்
இந்தப் படம் வெளியாவதிலும் பல பிரச்சினைகள் காணப்பட்டது. கடந்த ஓணம் பண்டிகையையொட்டியே இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படம் இன்னும் தயாராகவில்லை என்று கூறி படத்தின் ரிலீசை தள்ளி வைத்தார். இதையடுத்து இன்றைய தினம் கோல்ட் படம் ரிலீசாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது.

நேரம் -பிரேமம் போல இருக்காது
பிரித்விராஜ் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். முன்னதாக தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் கோல்ட் படம், தனது முந்தைய படங்களான நேரம் மற்றும் பிரேமம் போன்றது இல்லை என்றும் இது வேறு மாதிரியான படம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் நேரம் படத்தை ஒத்திருக்கும் என்றும் தெரிவித்த அல்போன்ஸ், இந்தப் படத்திற்காக புதிதாக 40 கேரக்டர்களை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோல்ட் தனித்துவமான படம்
மேலும் நேரம் படம் போல இருந்தாலும் கோல்ட் படம் தனித்துவமான இருக்கும் என்றும் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய தங்களது குழு பணியாற்றியுள்ளதாகவும் அதற்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். கோல்ட் படம் ரிலீசாகியுள்ள நிலையில் தற்போது அவரது இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
அவரது இந்த பதிவுக்கு ஏற்ப தற்போது வெளியாகியுள்ள கோல்ட் படம் முந்தைய படங்களை ஒத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் பிரேமம் படம் போல முழுமையான என்டர்டெயினராக அமையவில்லை என்றும் ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











