Ajith - மிஸ்டர் அஜித் அரசியலுக்கு வர விருப்பம் என்றீர்களே.. ஏன் இன்னும் வரவில்லை.. ஷாக் கொடுத்த இயக்குநர்
சென்னை: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அஜித் குறித்து போட்டிருக்கும் இன்ஸ்டா போஸ்ட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஒருசேர அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருக்கின்றனர். மேலும் அல்போன்ஸ் புத்திரன் நன்றாகத்தானே இருந்தார். இப்போது என்னவாகிவிட்டது என்றும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
அல்போன்ஸ் புத்திரன் மலையாளம் மற்றும் தமிழில் வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர். பொதுவாக இரண்டு மொழிகளிலும் ஒரு இயக்குநருக்கு ரசிகர்கள் இருப்பது அரிதிலும் அரிது. ஆனால் இரண்டு மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற பெயரைப் பெற்ற இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இவரது பிலிம் மேக்கிங்கிற்கென்று ஒரு ஸ்டைல் உண்டு.

கவனம் ஈர்த்த நேரம்: நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த படம் நேரம். கடந்த 2013ஆம் ஆண்டு ப்ளாக் காமெடி த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. இதன் மூலம் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக மாறினார் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படத்தின் மூலம் அல்போன்ஸின் படத்துக்கென்று எதிர்பார்ப்பும் எகிறியது.
மெகா ஹிட்டான பிரேமம்: நேரம் படத்துக்கு பிறகு பிரேமம் படத்தை இயக்கினார் அல்போன்ஸ் புத்திரன். 2015ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில்தான் சாய் பல்லவி அறிமுகமானார். நிவின் பாலி ஹீரோவாக நடித்திருந்தார். கேரளாவில் அந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பை விடவும் தமிழில் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது அந்தப் படத்துக்கு. அதேசமயம் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட தமிழ் படங்களின் நவீன வெர்ஷன்தான் பிரேமம் என்ற விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஹிட் பிரேமம்தான்:பிரேமம் படத்துக்கு அவர் இயக்கிய ஆந்தாலஜி படமான அவியல் தோல்வியை சந்தித்தது. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கோல்டு படமும் தோல்வியையே சந்தித்தது. கோல்டு படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட அல்போன்ஸ் புத்திரன் ஹிட் கொடுத்து 8 வருடங்கள் ஆகிவிட்டதால் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என்ற வேட்கையில் அவர் இருக்கிறார்.
அல்போன்ஸ் புத்திரனின் புதிய படம்: சூழல் இப்படி இருக்க நெஞ்சுக்கு நீதி, வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவிருந்தது. இப்படம் தமிழ் - மலையாளம் என பைலிங்குவலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலமாவது அல்போன்ஸ் புத்திரன் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது. இதற்கு இளையராஜா இசையமைப்பதாக இருந்தார்.
ஆட்டிசம்: சூழல் இப்படி சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனக்கு ஆட்டிசன் குறைபாடு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் சினிமாவில் இருந்து விலகுகிறேன்" என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பதிவை சிறிது நேரத்திலேயே டெலிட் செய்தும்விட்டார். இருப்பினும் அதற்குள் பலர் அந்த பதிவை பார்த்துவிட்டு அல்போன்ஸ் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று தெரிவிக்க ஆரம்பித்தனர். அதற்கு பிறகு அவர் அமைதியாக இருந்தார்.
பரபர போஸ்ட்: இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த போஸ்ட்டில் அவர், "நான் அஜித்குமாரிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா மூலம் கேள்விப்பட்டேன். அதாவது பிரேமம் படத்தை பார்த்துவிட்டு நிவின் பாலி நடிப்பில் அனோஷ்கா மயங்கிவிட்டதை உணர்ந்து நிவினை நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழைத்து பேசிய பிறகுதான் இதனை நான் அறிந்தேன். ஆனால் இதுவரை எந்த அரசியல் கட்சியிலும் உங்களை பார்க்கவில்லை.
அப்போ அது பொய்யா?: அப்படியென்றால் என்னிடம் சொல்லப்பட்டது எல்லாம் பொய்யா? அல்லது நீங்கள் மறந்துவிட்டீர்களா.. இல்லை யாராவது உங்களுக்கு எதிராக இருக்கிறார்களா?.. இந்த மூன்றுமே இல்லை என்றால் என்ன காரணம் என்பதை கடிதம் மூலம் பொதுவெளியில் நீங்கள் விளக்க வேண்டும். உங்களை நான் நம்புகிறேன். மக்களும் நம்புகிறார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த போஸ்ட் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முதன்முறை இல்லை: அதேசமயம் அல்போன்ஸ் புத்திரனின் சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட்கள் அனைத்துமே சம்பந்தம் இல்லாமல்தான் இருக்கின்றன. விஜயகாந்த் இறந்த தினத்தன்றுகூட, "உதயநிதி நான் உங்களை கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் அலுவலகத்தில் சந்தித்தேன். அப்போது உங்களை அரசியலுக்கு வரும்படி சொன்னேன். மேலும் கருணாநிதி, ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டறியுங்கள் என்றும் சொன்னேன். இப்போது விஜயகாந்த்தை கொன்றவர்களையும் நீங்கள் கண்டறியுங்கள்.
ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலினையும், கமல் ஹாசனையும் கொலை செய்ய சிலர் முயற்சி செய்தார்கள். இதை அப்படியே விட்டுவிட்டால் அடுத்த டார்கெட் நீங்களும், ஸ்டாலினும்தான். கொலையாளிகளையும், அவர்களின் நோக்கத்தையும் கண்டறிதல் உங்களுக்கு எளிய விஷயம்தான்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அல்போன்ஸின் சமீபத்திய பதிவுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஏதேனும் மன பிரச்னை வந்துவிட்டதோ என்றும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











