அஜித்தின் முகவரி படத்துக்கு இன்னொரு கிளைமாக்ஸ் இதுதான்... ப்ளாஷ்பேக் சொன்ன பிரபலம்
சென்னை: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித்தின் ஏகே 62 அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
லைகா தயாரிக்கும் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே அஜித் நடிப்பில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான முகவரி படத்தில் நடந்த சுவாரஸ்யம் குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த முகவரி VZ துரை இயக்கியிருந்தார்.

காத்திருக்கும் ரசிகர்கள்
கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான அஜித்தின் துணிவு சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள அவரது 62வது படத்தை லைகா தயாரிக்கிறது. இந்தப் படத்தின் இயக்குநராக முதல் விக்னேஷ் சிவன் கமிட்டாகி இருந்தார். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அட்ரஸ் கொடுத்த முகவரி
1993ல் வெளியான அமராவதி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அஜித், மெல்ல மெல்ல முன்னணி ஹீரோ பட்டியலில் இடம்பிடித்தார். குறிப்பாக 1998 முதல் அவரது கேரியரில் ஏராளமான மாற்றங்கள் நடந்தன. காதல் மன்னன், வாலி, ஆனந்த பூங்காற்றே, அமர்க்களம் போன்ற படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2000ம் ஆண்டில் வெளியான முகவரி, அஜித்தின் திரை பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது.

ஸ்மார்ட் லுக்கில் அஜித்
இந்தப் படத்தில் அஜித் செம்ம ஸ்மார்ட்டான லுக்கில் நடித்திருந்தார். லேசான தாடி, ஸ்லிம் என மொத்தமாக க்யூட் அண்ட் ஸ்மார்ட் என சொல்லலாம். ரசிகர்களின் மிக ஃபேவரைட் லுக் என்றால், அது முகவரியில் வரும் அஜித்தின் ஸ்ரீதர் கேரக்டராக தான் இருக்கும். இந்தப் படத்தில் இசையமைப்பாளர் என்ற லட்சியத்துடன் வலம் வரும் ஸ்ரீதர் என்ற கேரக்டரில் அஜித் நடித்திருந்தார். மேலும், அஜித்தின் காதலியாக ஜோதிகா, அண்ணனாக ரகுவரன் என படம் முழுக்க ஸ்மார்ட் ஃபீலிங்காக இருக்கும்.

ரசிகர்கள் அதிருப்தி
அதேபோல் தேவா இசையில் முகவரி படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். அஜித்தின் இசையமைப்பாளர் கனவுக்காக அவரது காதலியாக வரும் ஜோதிகாவும் அண்ணன் ரகுவரனும் சப்போர்ட்டாக இருப்பார்கள். ஆனால், கதையின் படி அஜித் மியூசிக் டைரக்டராக முடியாது. இந்த கிளைமாக்ஸை ரசிகர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

கிளைமாக்ஸ் ஃப்ளாஷ்பேக்
இந்நிலையில், தற்போது முகவரி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குநர் சுப்பிரமணியம் சிவா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில் முகவரி கிளைமாக்ஸை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அஜித் ஜெயிக்கிற மாதிரி இருந்தா தான் நன்றாக இருக்கும் என படம் வெளியானதும் ரசிகர்கள் கருத்துக் கூறிவிட்டனர். இதனால் உடனே படக்குழுவினர் கூடி முகவரி படத்திற்கு வேறொரு கிளைமாக்ஸ் முடிவு செய்தோம். அதில் அஜித் சார் பெட்ரோல் பங்கில் வேலை பார்ப்பதாகவும், அப்போது அங்கு செல்லும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அஜித்துக்கு மியூசிக் டைரக்டர் சான்ஸ் கொடுப்பதாகவும் எடுக்கவிருந்தோம்.

நோ சொன்ன பிரபலம்
உடனே அதற்கான சூட்டிங் செல்ல வேண்டும் என ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராமிடம் கூறினோம். ஆனால், அவர் அதனை கேட்டதும் அதெல்லாம் நல்லா இருக்காது. முகவரி படத்தின் கிளைமாக்ஸ் மாற்ற வேண்டும் என்றால் நான் ஷூட்டிங் வரமாட்டேன் என கண்டிப்பாக கூறிவிட்டார் என பேசியுள்ளார். வாலி படத்தில் நெகட்டிவான கேரக்டரில் நடித்திருந்த அஜித், முகவரியில் தனது லட்சத்தியத்தில் வெற்றிப் பெற முடியாமல் தோற்பதாக நடித்திருந்தார். அதன்பிறகு குடும்ப சூழலுக்காக வேலைக்கு செல்லும் அவர், சில வருடங்களுக்குப் பின்னர் இசையமைப்பாளராக வருவதாக முடித்திருப்பார்கள். இந்தப் படத்தில் சுப்ரமணியம் சிவா உதவி இயக்குநராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











