Sivakarthikeyan: சூர்யாவிடம் போட்ட சபதத்தை நிறைவேற்றிய சிவகார்த்திகேயன்.. அவரையே மிஞ்சிட்டாரே!
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ளார். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரிய ஸ்டாராக உயர்ந்து நிற்கின்றார். இவரைப் பார்த்து நம்பிக்கையோடு சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் இருந்து வருகின்றார். நடிகராக சினிமாவில் நுழைந்த சிவகார்த்திகேயன் இன்றைக்கு, பாடலாசிரியராக, பாடகராக, தயாரிப்பாளராக மிளிர்கிறார் என்றுதான் கூறவேண்டும். இப்படியான நிலையில் விஜய் டீவியில் சிவகார்த்திகேயன் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது, சூர்யாவிடம் சிவகார்த்திகேயன் கூறியதைப்போல் செய்துகாட்டிவிட்டார் என அவரது ரசிகர்கள் இணையத்தில் ஒரு வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் இருக்கும் பல நடிகர்களில் ஒரு நடிகராக மட்டும் அடையாளப்படுத்தப்படுவதில்லை. மாறாக, சூர்யா, அகரம் என்ற அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய குழைந்தைகளின் உயர்கல்விக்கு உறுதுணையாக இருக்கின்றார். இதுமட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகளுக்கும் தனது குரலைப் பதிவு செய்கின்றார். குறிப்பாக மாநில உரிமைகள் என்று வரும்போது, மிகவும் தைரியமாக குரல் கொடுப்பவராக உள்ளார்.

சூர்யா குறித்து மற்றொரு விஷயம் சொல்லவேண்டும் என்றால், உடலை மிகவும் கட்டுமஸ்தாக வைத்துக் கொள்வது. சூர்யாவின் உடற்பயிற்சி வீடியோக்களும் சரி, அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்பு குறித்து சினிமாவில் வரும் காட்சிகளும் சரி, பல இளைஞர்களுக்கு இன்றும் எடுத்துக்காட்டுதான். 49 வயதை எட்டியுள்ள சூர்யா, இப்போதும் தனது உடலை அவ்வளவு உறுதியாக வைத்துள்ளார். இப்படியான நிலையில் சூர்யா சில ஆண்டுகளுக்கு முன்னர், விஜய் டீவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிவகார்த்திகேயன்: அதில் போட்டியாளராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், சூர்யாவின் உடலைப் பார்த்து, நானும் இன்னும் 10 ஆண்டுகளில் உங்களைப்போல் ஆகிவிடுவேன் சார் எனக் கூறினார். தன்னைப் போல் ஒருவர் தனது உடலை உறுதியாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகின்றார் என்பதைப் பார்த்ததும் சூர்யாவுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. உடனே சூர்யாவும் சூப்பர் எனக் கூறினார்.
வீடியோ: அதன் பின்னர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த சிவகார்த்திகேயன், இப்போது தமிழ் சினிமாவில் ஸ்டாராக வளர்ந்து நிற்கின்றார். இப்படியான நிலையில், சிவகார்த்திகேயன், சூர்யாவிடம் கூறியதையும் அமரன் படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது உடலை எந்த அளவுக்கு உறுதியானதாக மாற்றிக் கொண்டுள்ளார் எனவும், சூர்யாவிடம் கூறியதை சிவகார்த்திகேயன் செய்துகாட்டிவிட்டார் எனக் கூறி, இணையத்தில் வீடியோவை வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
வசூல்: இப்படியான நிலையில், சூர்யாவை விடவும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்துவிட்டார் என்ற பேச்சும் ஓடிக்கொண்டு உள்ளது. அதாவது கடைசியாக வெளியான சிவகார்த்திகேயனின் அமரன் படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இன்னும் சொல்லப்போனால், வசூல் ரீதியாக தமிழ் சினிமாவில், விஜய், ரஜினி, கமல் ஆகியோருக்குப் பிறகு ரூபாய் 300 கோடிகளை வசூல் செய்த நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். இப்படியான நிலையில், வசூல் ரீதியாக சூர்யாவைவிடவும் சிவகார்த்திகேயன் வளர்ந்து நிற்கின்றார். மேலும் சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார்.


Click it and Unblock the Notifications











