Vijay: தளபதி கொடுத்த துப்பாக்கியை வாங்குன S.K.. த.வெ.க மாநாடு குறித்து என்ன சொல்லி இருக்காரு பாருங்க
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருந்து விலகப்போகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவர் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி. சலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஒருமாதத்திற்கு முன்னர் இருந்தே தொடங்கிய நிலையில், நேற்று விஜய் நேரில் மாநாடு ஏற்பாடு பணிகளை ஆய்வு செய்தார். திரைத்துறையில் தொடங்கி அரசியல் தளம் வரை பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியாக மாற்றி அறிவித்தார். இந்த அறிவிப்புக்காக பல நாட்கள் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. அத்துடன் விஜய் சினிமாவில் தற்போது ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடித்துவிட்டு, சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார். விஜய்யின் இந்த முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

இதனால் அவர் தற்போது நடித்து வரும் தளபதி 69 படம்தான் விஜய்யின் திரை வாழ்க்கையில் கடைசிப் படம் ஆகும். இந்நிலையில் விஜய்யின் இடம் அடுத்து யாருக்கு என்ற கேள்வி திரைத்துறையில் லேசாக எழ ஆரம்பித்தது. இதற்கு விஜய்யே தனது படத்தில் ஒரு காட்சியில் கூறிவிட்டார் என்று பலரும் கூறிவருகின்றனர்.

சிவகார்த்திகேயன்: அதாவது கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தக் காட்சியில், விஜய், சிவகார்த்திகேயன் கையில் துப்பாக்கியைக் கொடுத்து, "துப்பாக்கியைப் பிடிங்க சிவா" எனக் கூறுவார். இந்தக் காட்சி ரசிர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதாவது, விஜய் நடித்த படம் துப்பாக்கி. விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகவுள்ளதால், தனது இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் கையில் ஒப்படைத்துவிட்டுச் செல்கின்றார் என பேசப்பட்டது.

அமரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் பண்ணுகின்றேன் எனவும், 'அதான் துப்பாக்கியை கையில் வாங்கீட்டாருல, அப்பறம் என்ன' என பேசியதும் வேகமாகப் பரவயது.

வாழ்த்து: இந்நிலையில் இன்று, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதால் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் 🙏❤️" எனக் குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேனின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications











