Rajkumar periasamy: பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அமரன் பட இயக்குநர்.. அப்ப தனுஷ் படம்?
சென்னை: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியையொட்டி வெளியானது அமரன் படம். இந்த படம் பயோ-பிக்காக உருவான நிலையில் மிகப்பெரிய விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்தது. படத்தை கமல்ஹாசன் தயாரித்திருந்த நிலையில் தயாரிப்பாளராக அவரும் ஹேப்பி.
இந்நிலையில் அடுத்ததாக தனுஷின் 55வது படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. இதனிடையே பாலிவுட்டிலும் முன்னணி தயாரிப்பாளருடன் ராஜ்குமார் பெரியசாமி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி: நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டில் ரங்கூன் என்ற படத்தை இயக்கியிருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. இந்த படம் வெளியாகி ஏறக்குறைய 7 ஆண்டுகள் கழித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் அமரன் படம் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு இந்த படம் கொண்டு சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அவரது மார்க்கெட் வேல்யூவும் இந்த படத்தின் மூலம் தாறுமாறாக உயர்ந்துள்ளது. சம்பளமும்தான். அமரன் படத்தையடுத்து நடிகர் தனுஷின் 55வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
தனுஷின் 55வது படம்: கோபுரம் ஃபிலிம்ஸ் சார்பில் அன்பு செழியன் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் 55 படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ள நிலையில் அடுத்ததாக பாலிவுட்டிலும் படத்தை இயக்கும் வாய்ப்பு ராஜ்குமார் பெரியசாமிக்கு கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமரன் படம் திரையரங்குகளில் மாஸான ஹிட் கொடுத்தது மட்டுமில்லாமல் வசூலிலும் மிகச் சிறப்பாக அமைந்தது. படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளார்.
பாலிவுட்டில் என்ட்ரி: இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமிக்கும் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அமரன் படத்தின் ஹிட்டையடுத்து பிரபல ஹிந்தி தயாரிப்பாளர் பூஷன் குமார் தற்போது ராஜ்குமார் பெரியசாமியை வைத்து இந்தி படம் ஒன்றை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் 2025ம் ஆண்டில் துவங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். ராஜ்குமார் பெரியசாமியின் ரங்கூன் மற்றும் அமரன் படங்களுக்கிடையில் 7 ஆண்டுகள் இடைவெளி இருந்தது.
அடுத்தடுத்த வாய்ப்புகள்: இந்நிலையில் அமரன் படத்தின் சூப்பர்ஹிட், ராஜ்குமார் பெரியசாமிக்கு அடுத்தடுத்த முன்னணி படங்களில் இணையும் வாய்ப்பை பெற்றுத் தந்து வருகிறது. முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை கதைக்களமாக கொண்டு வெளியான அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 300க்கும் அதிகமான கோடிகளை வசூலித்துள்ள இந்தப் படம் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்தடுத்த படங்களும் சூப்பர்ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











