அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்.. 3 படங்களில் தீபாவளி வின்னர் யார்?.. ஜெயம் ரவி ஜெயித்தாரா?
சென்னை: இந்த தீபாவளிக்கு தமிழில் அமரன், ப்ளடி பெக்கர் மற்றும் ஜெயம் ரவி நடித்த பிரதர் என 3 படங்கள் வெளியாகி உள்ளன. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என ஏகப்பட்ட படங்களை இயக்கி பல வருடங்களாக ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த இயக்குநர் ராஜேஷ். எம் கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களை கொடுத்து வந்த நிலையில், இந்த பிரதர் திரைப்படம் அவருக்கு கம்பேக் படமாக மாறியுள்ளது.
ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி நட்ராஜ், பூமிகா, சரண்யா பொன்வண்ணன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பிரதர் படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளன. ப்ளடி பெக்கர் படத்தை போலவே இந்த படமும் முதல் பாதி தடுமாறினாலும் இரண்டாம் பாதியில் அக்கா, தம்பி எமோஷன் காட்சிகள் மீண்டுமொரு பாசமலர் படத்தை திரையில் காட்டியுள்ளது.

விவாகரத்து பிரச்சனைக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இந்த படத்தில் ரொமான்ஸ், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களை கவர்ந்துள்ளன. வசூல் ரீதியாக அமரன் மற்றும் ப்ளடி பெக்கர் படங்களுடன் போட்டிப் போட்ட இந்த படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலைமை மற்றும் மற்ற படங்களுடனான கம்பேரிசன் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
ப்ளடி பெக்கரை முந்திய பிரதர்: ராஜேஷ் எம். இயக்கத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன் நடித்து ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த பிரதர் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் அதிகபட்சமாக 2.7 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் 2.2 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், தீபாவளி ரேஸில் ஜெயம் ரவி 2வது இடத்தை பிடித்திருக்கிறார்.
அமரன் vs ப்ளடி பெக்கர் vs பிரதர்: ஆனால், சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்கு கிட்ட கூட இந்த இரண்டு படங்களும் நெருங்கமுடியவில்லை என்பது தான் நிதர்சனம். அமரன் திரைப்படம் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த நிலையில், பிரதர் மற்றும் ப்ளடி பெக்கர் 2 முதல் 3 கோடி ரூபாய்க்குள் தான் வசூல் செய்துள்ளன.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியான சைரன் திரைப்படம் பெரிதாக ஓடாத நிலையில், ஜெயம் ரவிக்கு போதுமான வெற்றியை பிரதர் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து அவர் நடிப்பில் காதலிக்க நேரமில்லை, ஜீனி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











