இந்தியன் 2வை இப்படி எடுத்திருக்க வேண்டும்.. படக்குழுவுக்கு அம்பிகா கொடுத்த ஐடியா
சென்னை: கமல் ஹாசன் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியானது இந்தியன் 2 திரைப்படம். பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த அந்தப் படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. முக்கியமாக வசூல் ரீதியாகவும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் படத்தை எப்படியாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்று படக்குழு ஏகப்பட்ட விஷயங்களை செய்தது. இந்த நிலையில் நடிகை அம்பிகா இந்தியன் 2 படம் பற்றி பேசியிருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் இந்தியன் 2. இந்தப் படமானது கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. லைகா நிறுவனத்தின் பிரமாண்ட பட்ஜெட்டில், அனிருத்தின் இசையில் படம் உருவாகியிருந்தது. இப்படத்தின் முதல் பாகம் க்ளாசிக்காக பார்க்கப்படுவதால் கண்டிப்பாக அதுபோல்தான் இருக்கும் என்ற நினைப்பில் படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள்.

சொதப்பிய படம்: ஆனால் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை படம். ஷங்கரின் இயக்கத்தை பார்த்த பலரும்; அவரது காலம் முடிந்துவிட்டது எத்தனை காலம்தான் இதே டெம்ப்ளேட்டிலேயே படத்தை எடுப்பார் என்று கூறினார். மேலும் கமல் ஹாசனின் மேக்கப்பையும் கடுமையாக ட்ரோல் செய்து; படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள். இதனால் படக்குழு பெரும் அப்செட்டில் இருப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
வசனமா இதெல்லாம்: முக்கியமாக படத்தில் இடம்பெற்ற சில சீன்கள் உதாரணமாக இலவச திட்டங்களை இழிவுப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல் இந்தியன் படத்தின் முதல் பாகத்துக்கு எழுத்தாளர் சுஜாதாவின் வசனங்கள் பெரிதும் உதவின. இந்தப் படத்தில் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து என இரண்டு எழுத்தாளர்கள் பணியாற்றியும் படத்தின் வசனங்கள் ஒன்றும் அவ்வளவாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதே பலரின் கருத்து.
வசூலிலும் டல்: விமர்சன ரீதியாக இப்படி தொடர்ந்து ஒருபக்கம் இந்தியன் 2 அடி வாங்கிக்கொண்டிருக்க; மறுபக்கம் வசூலிலும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாகி பெரிதாக வசூலிக்கவில்லை என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கிடையே வரும் ஆகஸ்ட் மாதமே நெட்ஃப்ளிக்ஸில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அம்பிகா பேட்டி: இதற்கிடையே படத்தின் நீளத்தையும் படக்குழு குறைத்தது. இந்நிலையில் நடிகை அம்பிகா இந்தியன் 2 படம் பற்றி பேசுகையில், "இந்தியன் 2 படம் பார்த்தேன். எனக்கு பிடிக்கத்தான் செய்திருந்தது. அதேசமயம் படத்தின் நீளம்தான் பிரச்னையாக தெரிந்தது.ஒருவேளை அவர்கள் படத்தின் நீளத்தை 12லிருந்து 15 நிமிடங்கள் இன்னமும் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











