Ameer: மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய அமீர்... வெளியானது இறைவன் மிகப் பெரியவன் ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். அதனைத் தொடர்ந்து ராம், பருத்திவீரன் படங்களையும் இயக்கினார். இதில் பருத்திவீரன் தமிழ் சினிமாவில் கல்ட் கிளாஸிக்காக கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தின் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார் அமீர்.
இறைவன் மிகப் பெரியவன் ஃபர்ஸ்ட் லுக்
இயக்குநர் பாலாவின் சேது படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த அமீர், அதனைத் தொடர்ந்து நந்தாவிலும் அசோசியேட் டைரக்டராக இருந்துள்ளார். அதன் பின்னர் சூர்யா ஹீரோவாக நடித்த மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநரானார். சூர்யா, த்ரிஷா, நந்தா, லைலா உள்ளிட்ட பலர் நடித்த மெளனம் பேசியதே, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஜீவா நடித்த ராம் படத்தை இயக்கினார். இதுவும் வெற்றிப் பெற்ற நிலையில், மூன்றாவதாக அமீர் இயக்கிய பருத்திவீரன் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. இதில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமாக, நாயகியாக நடித்த ப்ரியா மணிக்கும் தேசிய விருது கிடைத்தது. தமிழில் மிகச் சிறந்த கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்படும் பருத்திவீரன் கார்த்தியின் மார்க்கெட்டை உச்சம் தொட வைத்தது.
இறுதியாக ஆதிபகவன் படத்தை இயக்கியிருந்த அமீர், அதன் பின்னர் இயக்குநர் சீட்டில் உட்காரவே இல்லை. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் 'கன்னித்தீவு பொண்ணா' என குத்தாட்டம் போட்டு நடிப்பிலும் தடம் பதித்தார். முக்கியமாக வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். இதனால் தற்போது நடிகராக வலம் வருகிறார், வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் அமீர் நடிக்கவுள்ளார்.
அதேபோல் மாயவலை என்ற படத்திலும் ஆர்யாவின் தம்பியுடன் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'இறைவன் மிகப் பெரியவன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். வெற்றிமாறன், தங்கம் ஆகியோர் இந்தப் படத்தின் கதை எழுதியுள்ளனர். கரு பழனியப்பன் லீடிங் ரோலில் நடிக்கும் இறைவன் மிகப் பெரியவன் படத்தில் அசார், மைதீன் என இரு இளம் ஹீரோக்கள் அறிமுகமாகின்றனர். அதேபோல் அமீரின் ஃபேவரைட்டான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப் பெரியவன் அமீருக்கு நல்ல கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் இறைவன் மிகப் பெரியவன் அடுத்தாண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











