Ameer: "100 கோடி ஏமாற்றிய ஞானவேல் என்ற பொய்யனிடமிருந்து அமீரை காப்பாற்றுவோம்..” சூடு வைத்த இயக்குநர்
சென்னை: பருத்திவீரன் சர்ச்சையில் இயக்குநர் அமீர் பக்கம் நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. சென்னை மழை வெள்ளத்தில் காணாமல் போன இந்த சம்பவம், இப்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது.
100 கோடி ரூபாய் ஏமாற்றிய ஞானவேல்ராஜா
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். அதேபோல் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் மிகப் பெரிய லாபம் கொடுத்தது. ஆனால், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவான இந்தப் படத்தால் அமீர் - ஞானவேல்ராஜா இடையே பிரச்சினை உருவானது.

அதாவது அமீர் தான் பருத்திவீரன் படத்தை தயாரித்ததாகவும், அதற்கான பணத்தை ஞானவேல்ராஜா முழுமையாக கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அமீர் தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 16 ஆண்டுகளாக நடைபெறும் இந்த வழக்கு குறித்து சமீபத்தில் தான் தெரியவந்தது. மேலும், அமீர், ஞானவேல்ராஜா இருவரும் கொடுத்த பேட்டிகளால் பருத்திவீரன் சர்ச்சை மேலும் விஸ்வரூபம் எடுத்தது.
அப்போது இயக்குநர் அமீர் குறித்து ஞானவேல்ராஜா ஆணவத்துடன் மரியாதை குறைவாக பேசியிருந்தார். இதனையடுத்து அமீருக்கு ஆதரவாக பெரும் படையே களம் இறங்கியது. சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு பழனியப்பன், சேரன், நந்தா பெரியசாமி, சினேகன் என பலரும் அமீருக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தனர். இவர்களது வரிசையில் தற்போது இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரனும் இணைந்துள்ளார்.
பருத்திவீரன் சர்ச்சை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "ஓயாது அலைகள் என தலைப்பிட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி. அடித்த புயலில் ஒரு உண்மை செத்துவிடக் கூடாது என்பதற்காக இந்த கடிதம். இதுவரை கடந்த 17 ஆண்டுகளாக அண்ணன் அமீர் மீது நீங்கள் தூவிய விஷவிதை விருட்சமாய் மாறி, அண்ணன் அமீர் அவர்களின் திரை பயணத்தையே திசைமாற்றி போட்டுவிட்டது."
"நீங்கள் திட்டமிட்டு பரப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் இதுவரை எந்த பதிலும் தரவில்லை. ஆனால் அவரை ஒரு பொய்யனிடமிருந்து காப்பாற்ற ஒரு பெரும் படையொன்று திரண்டு அவர் பின்னால் அல்ல, முன்னால் நிற்கிறது. அவர்கள் பேசிய உண்மைகள் அண்ணன் அமீர் எவ்வளவு நேர்மையானவர், எப்படிப்பட்ட பெரும் படைப்பாளி என உலகறிய செய்திருக்கிறது."
"மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன் இந்த மூன்று படைப்புகளும் போதும், அமீர் அவர்களை இன்னொரு பாரதிராஜாவாக ஏற்றுக்கொள்ள எனத் தோன்றுகிறது. அவர் மீது நீங்கள் சேற்றை வாரி இறைத்து - அவருக்கு ஆதரவாக எல்லோரையும் உண்மையை பேச வைத்து, அவரின் பெருமைகளை உலகறிய செய்ததற்காக பெரும் நன்றி. உண்மை என்று ஏதேதோ பேசினீர்கள். இப்போது நாங்கள் உண்மையை பேச ஆரம்பிச்சுட்டா..."
"ஒரு அரசியல் பின்புலம் கொண்டவரிடம் பணத்தை பல மடங்கு பெருக்கி தருவதாகக் கூறி 100 கோடி பெற்று பின் மொத்த பணத்தையும் தராமல் நீங்கள் ஏமாற்றி விட்டதாக ஒரு செய்தி திரை துறை எங்கும் உலா வருகிறதே. அதை பற்றி பேசுவோமா? அல்லது உங்களது உண்மைத்தன்மை பற்றி பேசுவோமா.? உங்களின் கிரிமினல் தனத்தால் இன்னும் உங்களைப் பற்றிய உண்மைகள் வெளியே வரப் போகிறது."
"இதற்கு ஒரே தீர்வு, பேட்டியோ மன்னிப்பு கடிதமோ அல்ல. நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைவாக முடித்துக்கொண்டு, இடையில் பேசும் இடைத்தரகர்களின் பேச்சில் மாட்டிக் கொள்ளாமல், 17 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பணத்தை ஏமாற்றினீர்களோ, அதன் இன்றைய மதிப்பு என்னவோ, அதனை அண்ணன் அமீர் அவர்களிடம் காலம் தாழ்த்தாமல் ஒப்படைத்து நீங்கள் இந்த பிரச்சினையை முடித்து கொள்வதுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











