சூர்யாவுடன் மோதல்.. திரிஷாவை இம்ப்ரெஸ் செய்யனும்னு தேவையில்லை.. அமீர் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சென்னை: பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு இயக்குநராக அறிமுகமானவர் அமீர். தமிழில் தரமான படங்களை கொடுத்திருக்கும் அவர் சமீபகாலமாக படங்கள் இயக்குவதில்லை. மாறாக நடிப்பில் கவனம் செலுத்துகிறார். சூழல் இப்படி இருக்க அவரது முதல் படமான மௌனம் பேசியதே சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு அமீர் பிரத்யேக பேட்டி அளித்தார்.
மௌனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அமீர். சூர்யாவின் கரியர் வளர்ச்சியடைந்ததற்கு அந்தப் படமும் முக்கிய காரணங்களில் ஒன்று. முற்றிலும் வேறு ஒரு ஃப்ளேவரில் சூர்யாவை காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்துக்கு பிறகு ராம் படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் தயாரிக்கவும் செய்தார். அது வணிக ரீதியான வெற்றியை பெறாவிட்டாலும் சர்வதேச அளவில் பெரிய கவனத்தை ஈர்த்து அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இயக்குநர் டூ நடிகர்: அதனையடுத்து இயக்கிய பருத்திவீரன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படமாக மாறியது. தொடர்ச்சியாக படங்கள் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென நடிகராக மாறினார். சமீப காலமாக எந்தப் படத்தையும் இயக்கவில்லை. மாறாக வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அவர் இயக்குநராக மீண்டும் அவதாரம் எடுக்க வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இறைவன் மிகப்பெரியவன் படத்தை இயக்கவிருக்கிறார்.

அமீரின் பேட்டி: சூழல் இப்படி இருக்க அவரது முதல் படமான மௌனம் பேசியதே திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. முதன்முறை ரிலீஸ் செய்யப்பட்டபோது எப்படி ரெஸ்பான்ஸ் கிடைத்ததோ அதே ரெஸ்பான்ஸ் இப்போதும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார் அமீர். அவர் பேசுகையில், "திரைத்துறையில் நான் வெற்றியை ரசித்ததே இல்லை. மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு அந்த ஹீரோவுடனோ, தயாரிப்பாளருடனோ இன்னொரு படம் நான் செய்ததில்லை. ராம் படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து விருதுகளை எல்லாம் பெற்றது. ஆனால் நான் கடனில் இருந்தேன். அப்படி இருக்கும்போது அந்த விருதை நான் எப்படி ரசிப்பேன்.
சூர்யாவுடன் கருப்பு புள்ளி: யாருடன்தான் மனஸ்தாபம் இருக்கவில்லை. ஒரு ப்ரஸ் மீட்டில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் கூறிய பதில்தான் சூர்யாவுக்கும் எனக்கும் இடையே கருப்பு புள்ளி விழுவதற்கு காரணமாக இருந்தது. நான் எந்த உள்நோக்கத்துடனும் அந்த பதிலை சொல்லவில்லை. மதுரை தெற்கு வாசலில் ஒரு கடையில் வாங்கிய புத்தகத்தில் திரிஷாவின் புகைப்படம் இருந்தது. மௌனம் பேசியதே ஆரம்பிப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் அதை வாங்கினேன். அப்போதே, நாம் படம் செய்தால் இந்தப் பெண்ணை ஹீரோயினாக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
படம் ஆரம்பிக்கும்போது தயாரிப்பாளரிடம் அந்தப் புத்தகத்தை காட்டி இவங்கதான் ஹீரோயினாக வேண்டும் என்று சொன்னேன். இதை நான் திரிஷாவிடம் இதுவரை சொல்லியதே இல்லை. அப்படி சொல்லி அவரை இம்ப்ரெஸ் செய்ய வேண்டிய எந்த தேவையும் எனக்கு இல்லை. அந்த பழக்கமும் எனக்கு இல்லை. புதுச்சேரியில் படங்கள் எடுத்தாலே அந்தப் படங்கள் தோல்வியடைந்துவிடும் என்று ஒரு சென்ட்டிமென்ட் இருந்தது. அதை உடைத்தது மௌனம் பேசியதே படம்தான். அங்கேதான் செட் போட்டு ஷூட் செய்வேன் பிடிவாதமாக தயாரிப்பாளரிடம் சொன்னேன்" என்றார்.


Click it and Unblock the Notifications