எல்லாம் ரெடியாகிடுச்சு.. ராஜன் வகையறா ஸ்டார்ட் ஆகப்போகுதாம்.. அமீர் சொன்ன குட் நியூஸ்
சென்னை: வெற்றிமாறன் இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவர் இதுவரை இயக்கியிருக்கும் அனைத்து படங்களுமே ஹிட்டாகியிருக்கின்றன. வணிக ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாக படங்கள் கொண்டாடப்படும். இப்போது அவர் சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் ஷுட்டிங்கோடு ராஜன் வகையறா திரைப்படத்தின் பணிகளையும் கவனித்திருக்கிறார். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் இப்படம் குறித்து பேசியிருக்கிறார்.
பாலுமகேந்திரா, கதிர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த வெற்றிமாறன்; தனுஷை வைத்து பொல்லாதவன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்,விடுதலை 1, விடுதலை 2 ஆகிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. முக்கியமாக சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும் அவை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுடன் அரசன்: விடுதலை 2வுக்கு பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அதன் ஷூட்டிங் தொடங்குவதற்கு தாமதம் ஆனது. எனவே சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகிவிட்டார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கியமான கேரக்டர்களை ஏற்றிருக்கிறார்கள். படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டவது ஷெட்யூல் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.
என்ன கதை?: மதுரையிலிருந்து சென்னை வரும் ஒரு விளையாட்டு வீரர் எப்படி ரவுடியாக மாறுகிறார் என்பதையும்; அதை சுற்றி நடக்கும் விஷயங்களும்தான் படத்தின் ஒன் லைன் சொல்லப்படுகிறது. அதுமட்டுமன்றி சென்னையை சேர்ந்த மயிலை சிவா என்கிற டைகர் சிவாவின் வாழ்க்கையைத்தான் படமாக எடுத்திருக்கிறார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. எது எப்படியோ வெற்றிமாறன் எந்த சப்ஜெக்ட்டை கையில் எடுத்தாலும் அதற்கு நூறு சதவீதம் நேர்மையாக இருந்து உழைப்பை கொட்டுவார் என்பது மட்டும் உறுதி.
படத்துக்கு வந்த பிரச்னை: சிம்பு இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் சொதப்பாமல் கலந்துகொள்கிறாராம். இருந்தாலும் வேல்ஸ் நிறுவனத்துடன் அவருக்கு ஏற்பட்ட பிணக்கு இப்படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தும் நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டது. ஒருவழியாக அந்தப் பிரச்னைகள் எல்லாம் முடிவடைந்து மீண்டும் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கிடையே வடசென்னை உலகத்தில் நிகழும் மற்றொரு கதையான ராஜன் வகையறா படத்தின் கதையையும் முழுமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார் வெற்றி.
இரண்டு ஷூட்டிங்குகள்?: மேலும் அரசன் பட ஷூட்டிங்கில் கிடைத்த கேப்பை ராஜன் வகையறாவுக்கு அவர் பயன்படுத்திக்கொண்டதாகவும் பேச்சு ஓடியது. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நானும் வெற்றியும் இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றாகத்தான் காரில் வந்தோம். அப்போது அவர் சொன்னதை உங்களிடமே சொல்லிவிடுகிறேன். ராஜன் வகையறா படத்தின் ஷூட்டிங்கை விரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications
