கமல்ஹாசனின் தக் லைஃப்.. படம் பார்த்த பிறகு அமீர் வெளிப்படுத்திய ஆசை என்ன தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் அமீர். தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் எந்தவித சமரசமுமின்றி ரசிகர்களுக்கு கொடுப்பவர். முக்கியமாக அவர் இயக்கிய ராம், பருத்திவீரன் ஆகிய படங்கள் கல்ட் க்ளாசிக்காக இருப்பவை. அதிலும் பருத்திவீரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதுதான் உண்மை. இதற்கிடையே அவர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக சேது, நந்தா ஆகிய இரண்டு படங்களில் பணியாற்றியிருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் டீசன்ட்டான வரவேற்பைதான் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது படத்திலேயே சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அமீர்; ராம் படத்தை இயக்கினார். ஜீவா நடித்த அப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கி நிறுத்திய பருத்திவீரன்: இப்படிப்பட்ட சூழலில்தான் கார்த்தியை வைத்து பருத்திவீரன் திரைப்படத்தை எடுத்தார் அமீர். அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கம் அவ்வளவு பெரியது. முக்கியமாக ஒரு அறிமுக நடிகருக்கு இப்படி ஒரு படம் கிடைப்பதெல்லாம் பெரிய விஷயம் என்று ரஜினிகாந்த்தும் ஒரு மேடையில் பாராட்டியிருக்கிறார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அந்தப் படத்தை தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடியது. அதன் காரணமாக அமீரின் பெயர் பெரிய உயரத்துக்கு சென்றது.
இயக்குநராக சறுக்கல்: ஆனால் அதே படத்தால்தான் அமீருக்கு பிரச்னைகளும் சுற்றின. சில வருடங்களுக்கு முன்புகூட அவருக்கும் சூர்யா தரப்புக்கும் பருத்திவீரனால் பஞ்சாயத்து மீண்டும் ஆரம்பமானது நினைவுகூரத்தக்கது. பருத்திவீரனை தொடர்ந்து அவர் இயக்கிய ஆதிபகவான் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. அவர் இயக்குநராக உச்சத்தில் இருந்தபோதே யோகி படத்தில் நடித்து நடிகராகவும் அறிமுகமாகியிருந்தார்.

பிஸியான நடிகர்: இயக்குநராக சறுக்கலை சந்தித்த அவர் நடிப்பில் இப்போது பிஸியாக இருக்கிறார். அவரது நடிப்பு கரியரிலேயே வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படம் முக்கியமான ஒன்று. சிறிது நேரம் மட்டுமே அமீர் அந்தப் படத்தில் நடித்திருந்தாலும் அவர் ஏற்றிருந்த ராஜன் கேரக்டர்தான் அந்தப் படத்தின் மையசரடு என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உயிர் தமிழுக்கு போன்ற படங்களில் நடித்தார். விரைவில் தொடங்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் முக்கிய ரோலை ஏற்றிருக்கிறார் அமீர். விரைவில் படம் ஒன்றையும் இயக்குகிறார்.
கமலின் ரசிகர்: இதற்கிடையே கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகர் அமீர். தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ராம் படத்தை அவர் தயாரித்த சமயத்தில்தான் விருமாண்டி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக ராம் பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு படம் பார்த்துவிட்டு வந்தவர். ஒருநாள் ஷூட்டிங் கேன்சல் என்றால் எவ்வளவு நஷ்டம் ஆகும் என தெரிந்தும் அந்த செயலை செய்யும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர் அமீர்.
அமீரின் ஆசை: இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படத்தை நேற்று மதுரையில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்தார். படத்தை பார்த்துவிட்டு பேசிய அவர், "தக் லைஃப் படம் பார்த்தேன். கமல்ஹாசனை இயக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நெடுநாட்களாக இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக கமல்ஹாசனின் படங்கள் வெளியாகும்போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில்தான் பார்ப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











