Ameer: “இந்த சீனெல்லாம் செல்லாது... ஏமாத்தின பணத்த திருப்பித் தரணும்”: ஞானவேலை வறுத்த சமுத்திரகனி
சென்னை: கடந்த சில தினங்களாகவே பருத்திவீரன் பட பிரச்சினை கோலிவுட்டில் கொளுந்துவிட்டு எரிகிறது.
அமீர் - ஞானவேல்ராஜா இடையேயான இந்தப் பிரச்சினையில் பருத்திவீரன் தொடர்பான ஏராளமான தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமுத்திரகனி, அமீரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அமீரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கணும்
பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீர் - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பருத்திவீரன் ரிலீஸாகி 16 ஆண்டுகள் ஆன பின்னரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஆனால், முழுமையான பிரச்சினை என்னவென்பது சமீபத்தில் தான் அடுத்தடுத்து தெரியவந்துள்ளன.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவான இந்தப் படத்தால், தனக்கு 2 கோடி வரை நஷ்டம் என அமீர் கூறியிருந்தார். அதேபோல், ஞானவேல்ராஜாவும் அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இதனால் ஞானவேல்ராஜாவுக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டதன் காரணமாக, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது, அதற்காக உண்மையை பலி கொடுக்க முடியாது என சசிகுமார் உடனடியாக பதிலடி கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கரு பழனியப்பன் கொடுத்துள்ள பேட்டியும் வைரலாகி வருகிறது. இந்த வரிசையில் நடிகர் சமுத்திரகனி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "பிரதர் இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது. நீங்க செய்ய வேண்டியது, எந்த பொதுவெளியில் எகத்தாளமாக உட்கார்ந்துகிட்டு அருவருப்பான உடல் மொழியால சேற்ற வாரி இறைச்சீங்களோ... அதே பொதுவெளியில் பகிரங்கமா மன்னிப்பு கேக்கணும். நீங்க கொடுத்த அந்த கேவலமான, தரங்கெட்ட இன்டெர்வியூவை சமூக வலைத்தளங்களில் இருந்து துடைச்சு தூர எறியணும்."
"அன்னைக்கு கொடுக்காம ஏமாத்திட்டுப் போன பணத்தை ஒத்த பைசா பாக்கி இல்லாம திருப்பிக் கொடுக்கணும். ஏன்னா கடனா வாங்குன நிறைய பேருக்கு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கு. அப்புறம் 'பருத்திவீரன்' படத்தில் வேலைப் பார்த்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பல பேருக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. பாவம், அவங்கெல்லாம் எளிமையான குடும்பத்துல இருந்து வந்து வேலை பார்த்தவங்க. 'நீங்க தான் அம்பானி பேமிலியாச்சே..' காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதி" என காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











