Ameer: “போலியான வருத்தம்..” ஞானவேல்ராஜாவை விடாமல் துரத்தும் சசிகுமார்.. தொடரும் பருத்திவீரன் சர்ச்சை
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல் ராஜா இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பலரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதனையடுத்து அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து தற்போது அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சசிகுமார், ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது என காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஞானவேல்ராஜாவின் வருத்தம் போலியானது
அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். 2007ம் ஆண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே கார்த்தியின் கேரியரும் மார்க்கெட் வேல்யூம் உச்சம் சென்றது. அதேநேரம், பட்ஜெட் பிரச்சினை காரணமாக அமீர் - ஞானவேல்ராஜா இடையே பிரச்சினை உருவானது.
ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் உருவான இந்தப் படத்தால், தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் என ஞானவேல்ராஜா மீது அமீர் குற்றம்சாட்டினார். மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருப்பதாகவும் அமீர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து பருத்திவீரன் சர்ச்சை குறித்து ஞானவேல்ராஜாவும் பல யூடியூப் சேனல்களில் பேட்டிக் கொடுத்திருந்தார்.

அதில், அமீரால் தனக்கு நஷ்டம் எனவும், பொய் கணக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் அமீரை திருடன் என சொன்னதோடு இன்னும் தகாத வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதனால், பருத்திவீரன் சர்ச்சை இன்னும் விஸ்வரூபம் எடுத்தது. பதிலுக்கு அமீரும் அறிக்கை வெளியிட்ட நிலையில், சசிகுமார் ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சமுத்திரகனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், சினேகன், இயக்குநர் பாரதிராஜா, குட்டிச்சாக்கு ஆகியோரும் ஞானவேல்ராஜாவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஞானவேல்ராஜா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், "பருத்திவீரன் பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இதுநாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்து அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழகியவன். அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது."
"அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி!" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பருத்துவீரன் சர்ச்சை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஞானவேல்ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ள சசிகுமார், அவரது வருத்தம் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். "போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது" என தலைப்பில் சசிகுமார் கொடுத்துள்ள அறிக்கையில், "அமீர் அண்ணன் ஞான்வேல்ராஜா மீது சுமத்திய போலியான குற்றச்சாட்டுகள் என்ன.? 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுத்தி இருந்தால்' என்று குறிப்பிட்டுச் சொல்கிறார் ஞானவேல்ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன?"
"திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம்? இதன்மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்வது என்ன? பெயரிடப்படாத அந்தக் கடிதம் யாருக்கு?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், பருத்திவீரன் சர்ச்சை இப்போதைக்கு முடிவுக்கு வராது என சொல்லப்படுகிறது. அதேநேரம், இந்தப் பிரச்சினையில் தொடர்புடைய சூர்யா, கார்த்தி ஆகியோர் இன்னும் அமைதி காக்கிறார்கள் என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











