Ameer: "ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள்..” அமீருக்காக மீண்டும் குரல் கொடுத்த சசிகுமார்!
சென்னை: கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்தி வீரன் படத்தை அமீர் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இயக்குநர் அமீருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஞானவேல் ராஜா சொல்வது பொய் என சசிக்குமார் கூறியிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள சசிகுமார், இந்த சம்பவத்தில் இயக்குநர்கள் சங்கத்தையும் அலர்ட் செய்துள்ளார்.
அமீருக்காக மீண்டும் குரல் கொடுத்த சசிகுமார்
மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அமீர். சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் ராம் படத்தை இயக்கினார் அமீர். மூன்றாவதாக அவர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் தமிழ் சினிமாவின் தனி அடையாளமாக கொண்டாடப்பட்டது.
கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன், அவரது கேரியரை உச்சம் கொண்டு சென்ற படமாக அமைந்தது. முதல் படத்திலேயே கார்த்தியை பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தார் அமீர். அதேபோல், நாயகி ப்ரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் கோலிவுட்டின் கல்ட் கிளாசிக் சினிமாவாக பார்க்கப்படும் பருத்திவீரன் படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தார்.
அதாவது 2.75 கோடி ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அமீர் இந்தப் படத்தை இயக்கியதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடிக்கும் மேல் கடன் என அமீர் கூறியிருந்தார். மேலும், இதற்கு ஞானவேல் ராஜா தான் காரணம் எனவும், இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதற்காக விளக்கம் கொடுத்த ஞானவேல் ராஜா, அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், பருத்தி வீரன் படத்தால் அதிகம் சம்பாதித்தது அவர் தான் எனவும் பேட்டிக் கொடுத்திருந்தார்.
பருத்திவீரனை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் 2.75 கோடி பட்ஜெட்டில் முடிப்பதாக சொல்லிவிட்டு, இரண்டு ஆண்டுகளில் 4 கோடி வரை அமீர் செலவு செய்தார். அதுமட்டும் இல்லாமல் பன்றிகளை நடிக்க வைத்ததில் கூட பொய்யான கணக்கு எழுதி தன்னை ஏமாற்றிவிட்டதாக ஞானவேல்ராஜா கூறியிருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அமீருக்கு ஆதரவாக மெளனம் பேசியதே தயாரிப்பாளர் கணேஷ் ரகு பேட்டிக் கொடுத்திருந்தார்.
அதில், அமீர் விஷயத்தில் ஞானவேல் ராஜா சொல்வது பொய் என்றும், அவரைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் எனவும் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சசிகுமாரும் அமீருக்கு ஆதரவு தெரிவித்தார். ”அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். “பருத்திவீரன்” இறுதிகட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அண்ணன் அமீர் சொல்வது உண்மை” என ஒரே போடாக போட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அமீருக்காக குரல் கொடுத்துள்ளார் சசிகுமார். அதில், "அண்ணன் அமீர் இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும் போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்" என தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இதனால், ஞானவேல் ராஜா சொல்வது தான் பொய்யாக இருக்கும் என நெட்டிசன்களும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். மேலும், பருத்திவீரன் படத்திற்காக அக்ரிமெண்ட் போட்டிருந்தால், அதனை ஞானவேல் ராஜா வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











