Ameer: “பருத்திவீரன்ல சம்பளமே வாங்கல... சிவகுமார் பேசாம இருக்குறது நியாயமா..?” சினேகன் ஆதங்கம்!
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
அதேநேரம் அமீர் குறித்து பேசியதற்கு ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனாலும் தொடர்ந்து அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பருத்திவீரன் படத்திற்கு பாடல்கள் எழுதிய சினேகன், மீண்டும் அமீருக்காக குரல் கொடுத்துள்ளார்.

சிவகுமார் பேச வேண்டும்
அமீர் இயக்கிய பருத்திவீரன் திரைப்படம் 2007ம் ஆண்டு வெளியானது. கார்த்தி ஹீரோவாக அறிமுகமான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. தமிழில் ஆகச் சிறந்த கல்ட் கிளாஸிக் சினிமாவாக கொண்டாடப்பட்டது பருத்திவீரன். இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பில் அமீருக்கும் ஞானவேல்ராஜாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
பருத்திவீரன் படப்பிடிப்பு தொடங்கியது முதலே பல்வேறு பிரச்சினைகளை கடந்து தான் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஞானவேல்ராஜா தயாரிப்பில் இருந்து விலகி விட்டதாகவும், பின்னர் அமீரே சொந்தமாக கடன் வாங்கி இந்தப் படத்தை முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், பருத்திவீரன் பட விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது குறித்து அமீர் பேசியிருந்தார்.
பருத்திவீரன் படத்தால் தனக்கு 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் என்பதால், அதற்காக வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாக அமீர் கூறியிருந்தார். ஆனால், அமீர் தான் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் திருடன் எனவும் ஞானவேல்ராஜா கூறியிருந்தார். ஞானவேல்ராஜாவின் பேட்டி வைரலான நிலையில், அவர் சொல்வதெல்லாம் பொய் என அபராஜித் ஃபிலிம்ஸ் கணேஷ் ரகு, சசிகுமார், நடிகர் சமுத்திரகனி, பொன்வண்ணன், குட்டிச்சாக்கு, பாரதிராஜா, சினேகன் ஆகியோர் அமீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அமீருக்கு ஆதரவு பெருகியதை அடுத்து ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய சமுத்திரகனி, பருத்திவீரனில் பணியாற்றிய பலருக்கும் இன்னும் சம்பள பாக்கி இருப்பதாக தனது அறிக்கையில் கூறியிருந்தார். அதனை உறுதி செய்யும் விதமாக தற்போது சினேகன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், பருத்திவீரன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளேன்.
ஆனால், இதுவரை அதற்காக சம்பளம் வாங்கியது கிடையாது. பருத்திவீரன் படத்தை அமீர் பல சிரமங்களுக்கு மத்தியில் முடித்து ரிலீஸ் செய்தார். ஆனால், அதையெல்லாம் உணராமல் ஞானவேல்ராஜா பேசியது தவறான செயல். இது எல்லாவற்றுக்கும் பெரிய மனிதரான சிவகுமார் பொறுபேற்க வேண்டும். அவர் பேசாமல் அமைதி காப்பது எதனால் என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, "நான் இயக்குநர் அமீரோடு அவரின் முதல் படத்தில் இருந்து இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை. பருத்திவீரன் படத்தை முடிப்பதற்கு அவர் எவ்வளவு சிரமத்திற்கு உள்ளானார் என்பது அவரோடு கூட பயணித்த என்னைப் போன்றவர்களுக்கு தான் தெரியும். ஒருவரை விமர்சிப்பதற்கும் அறம் தெரிந்திருக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











