விஜய்க்கு ரஜினி குடும்பத்திலிருந்து வந்த வாழ்த்து.. பிரச்னை முடிந்ததா?.. போய் வேலையை பாருங்க ப்பா
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். கடந்த சில நாட்களாக அவர் தன் பணிகளை மும்முரமாக செய்துவருகிறார். அதுமட்டுமின்றி மாற்று கட்சி தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ரஜினியை விஜய் சந்திக்கவில்லை. அது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ரஜினி தரப்பிலிருந்தும் விஜய்க்கு வாழ்த்து வராததும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் கடந்த வாரத்தில் பதவியேற்றுக்கொண்டார். முதலில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அதிமுகவிலிருந்து மொத்தம் 25 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் கிடைத்தது. இதன் காரணமாக விஜய் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றார். பெரும்பான்மை நிரூபிப்பதில் எதுவும் பிரச்னை வருமோ என்று பயந்த தவெகவினர்; இப்போது உற்சாகமாக இருக்கிறார்கள்.

நாகரீக அரசியல்: இதற்கிடையே ஸ்டாலின் முன்னெடுத்த நாகரீக அரசியலை விஜய்யும் முன்னெடுப்பாரா என்று கேள்வி இருந்தது. இப்போதுவரை அவரும் அந்தப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறார். ஸ்டாலின், உதயநிதி, வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமான் என பலரையும் சந்தித்தார். அதிலும் திமுகவை திட்டி திட்டியே அரசியல் செய்து முதலமைச்சராக மாறியிருக்கும் விஜய்; ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றதை யாருமே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
ரஜினியை சந்திக்கவில்லை: மாற்று கட்சியின் தலைவர்களை சந்தித்த விஜய்; ரஜினியையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவார் என்று கணிக்கப்பட்டது. திரைத்துறையில் ஏற்கனவே அவர்கள் இரண்டு பேருக்குமிடையே பலமான போட்டி நிலவியது. அதுமட்டுமின்றி தேர்தல் முடிந்த பிறகு ஸ்டாலினையும் நேரில் சந்தித்தார் ரஜினி. சூழல் இப்படி இருக்க ரஜினியுடனான மோதலை விஜய் நேரில் சந்தித்து முடிவுக்கு கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி: இப்போதுவரை ரஜினியிடமிருந்தும் விஜய்க்கு வாழ்த்து வரவில்லை. ரஜினியை எப்படி ஒதுக்கினாரோ அதேபோல் மநீம தலைவரும், நடிகருமான கமலையும் விஜய் சந்திக்கவில்லை. இருப்பினும் கமலிடமிருந்து வாழ்த்து வந்தது. இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகளும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார். அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் வென்றிருப்பது ஒரு வரலாறு வெற்றிதான்.
மக்கள் எதிர்பார்க்கிறார்கள்: விஜய் அண்ணா நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அவரும், தவெகவினரும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். விஜய்க்கு என்னுடைய ஆல் தி பெஸ்ட். என் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன். நிறைய சவால்களை சந்தித்திருக்கிறீர்கள். இனிமேலும் அதிக சவால்கள் வரப்போகின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications
