தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் இல்லை.. ஆனால் "தி வல்வரைன்" 120 தியேட்டர்களில் ரிலீஸ்!
தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று கைவிரித்துவிட்டதால், இந்த வாரம் வெளியாக வேண்டிய தங்கமீன்கள் உள்ளிட்ட 3 படங்கள் தள்ளிப் போய்விட்ட நிலையில், ஹாலிவுட் படமான தி வல்வரைனுக்கு 120 தியேட்டர்களை ஒதுக்கியுள்ளனர்.
இது தமிழ்ப் படைப்பாளிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

தியேட்டர் இல்ல...
கோடம்பாக்கத்தில் கடந்த சில மாதங்களாக ஏராளமான படங்கள் தயாராகி வருகின்றன. அவற்றில் பல பெரிய அளவில் வெளியாகத் திட்டமிட்டு தயாராகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் தியேட்டர்கள் பற்றாக்குறையால் எப்படியாவது வெளியிட்டால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு படங்கள் வெளியாக, அவற்றை யாரும் கண்டுகொள்ளாமலே போகும் நிலை உள்ளது.

டப்பிங் படங்கள் ஆதிக்கம்
அதுவும் சமீப காலமாக டப்பிங் படங்கள் தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்து வருகின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் ஒரு பக்கம், ஹாலிவுட் அல்லது தெலுங்கு டப்பிங் படங்கள் மறுபக்கமும் ஆதிக்கம் செலுத்துவதால் சிறுமுதலீட்டில் எடுக்கப்படும் சில தரமான படங்கள் போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் அல்லாடுகின்றன.

5 படங்களில் 2 மட்டுமே ரிலீஸ்
இந்த வாரம் மொத்தம் 5தமிழ்ப் படங்கள் வெளியாக இருந்தன. ஆனால் தியேட்டர் பற்றாக்குறையால் பட்டத்து யானையும் சொன்னா புரியாது படமும் மட்டும் வெளியாகின்றன.

வல்வரைனுக்கு 120
ஆனால் ஹாலிவுட் படமான வல்வரைனுக்கு 120 தியேட்டர்களை ஒதுக்கியுள்ளனர். எக்ஸ்மேன் - வல்வரைன் 2 என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தை தமிழிலும் டப் செய்துள்ளனர். ஹ்யூ ஜாக்மேன் நடித்துள்ளார். ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

சென்னையில் மட்டும்...
சென்னையில் மட்டுமே 17 ஸ்க்ரீன்களில் இந்தப் படம் வெளியாகிறது. இதையல்லாம் கவனத்தில் கொண்டு தயாரிப்பாளர் சங்கமும், இயக்குநர்கள் சங்கமும் தமிழ்ப் படங்களை தடங்கலின்றி வெளியிட தியேட்டர்கள் கிடைக்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுக்க தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











