புகழ் பெற்ற கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை மீண்டும் தொகுத்தளிக்க வருகிறார் சூப்பர் ஸ்டார் அமிதாப்

இது கோன் பனேகா குரோர்பதியின் நான்காவது சீசன் நிகழ்ச்சியாகும். இங்கிலாந்து டிவியில் ஒளிபரப்பாகும் ஹூ வான்ட்ஸ் டு பி ஏ மில்லியனர் என்ற நிகழ்ச்சியின் பிரதிபலிப்பே இது. ஸ்லம்டாக் மில்லியனர் படமும் இதை அடிப்படையாகக் கொண்ட கதைதான் என்பது நினைவிருக்கலாம்.
இந்த ஆண்டு இறுதியில், நான்காவது சீசன் கோன் பனேகா குரோர்பதி ஒளிபரப்பாகவுள்ளது. ஆனால் வேறு டிவியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோன் பனேகா குரோர்பதி முதல்முறையாக 2001ம் ஆண்டு ஒளிபரப்பானது. முதல் சீசனை அமிதாப் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றது.
பின்னர் 2005ல் 2வது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பரிசுப் பணம் ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது அமிதாப்புக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 2006ம் ஆண்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் 2007ல் மீண்டும் நிகழ்ச்சி வந்தபோது அதை அமிதாப்புக்குப் பதில் ஷாருக் கான் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் தற்போது நான்காவது சீசனை மீண்டும் அமிதாப்பே தொகுத்து வழங்கவுள்ளார்.முன்னதாக அனில் கபூரை தொகுத்தளிக்க வைப்பது குறித்து ஆலோசனை நடந்ததாம். ஆனால் பலரும் அமிதாப் பெயரை பரிந்துரைக்கவே அமிதாப்பையே மீண்டும் ஹோஸ்ட் ஆக்க தயாரிப்பு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மேலும் ஷாருக்கானை விட அமிதாப் இந்த நிகழ்ச்சியை நடத்தியபோதுதான் அது மிகவும் பிரபலமாக இருந்ததாக கருத்துக் கணிப்பின் மூலம் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். அதேசமயம், அமிதாப் பச்சனால்தான் இந்த நிகழ்ச்சி பிரபலமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அமிதாப் பச்சன் இந்த நிகழ்ச்சியை நடத்திய காலங்களில் நாடு முழுவதும் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வசூல் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அந்த அளவுக்கு கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி நாடு முழுவதையும் மக்களை கட்டிப்போட்ட மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும்.
அதிலும் உச்ச்சமாக, அமிதாப்பின் நண்பரும், டெல்லியில் தியேட்டர் நடத்தி வந்தவருமான ஒருவர், தயவு செய்து உங்களது நிகழ்ச்சியின் நேரத்தை மாற்றி வையுங்கள், எனது தியேட்டருக்கு வருவோர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து தொழில் பாதித்துள்ளதாக கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவது சீசன் கோன் பனேகா குறித்த அறிவிப்பு விரைவில் முறைப்படி அறிவிக்கப்படுமாம்.


Click it and Unblock the Notifications











