சசிகபூர் விரைந்து நலம் பெற வேண்டும் - டுவிட்டரில் அமிதாப் பிரார்த்தனை
மும்பை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் சசிகபூர், விரைந்து நலம் பெற வேண்டும் என நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டர் வாயிலாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
தனது சிறுவயதிலேயே நடிக்கத் தொடக்கிய நடிகர் சசிகபூர், கடந்த 1960 - 70 ஆண்டு வாக்கில் இந்தி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர். நடிகராக மட்டுமின்றி பட இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் சசிகபூர்.
இதுவரை சுமார் 116 இந்திப் படங்களில் நடித்துள்ள சசிகபூர், 3 முறை தேசிய விருதுகள் வாங்கியுள்ளார். இது தவிர பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் பத்மபூஷன் விருது உள்பட பல விருதுகளுக்கும் சொந்தக்காரர் சசிகபூர்.

மூச்சுத் திணறல்...
தற்போது 76 வயதாகும் சசிகபூருக்கு கடந்த சனிக்கிழமையன்று திடீரென கடுமையான இருமலும், அதனைத் தொடர்ந்து மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்பட்டது. உடனடியாக மேற்கு அந்தேரி புறநகரில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சசிகபூர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சை...
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் சசிகபூரின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமிதாப்...
இந்நிலையில், திரிசூல், சில்சிலா, கபீ கபீ ஆகிய படங்களில் உடன் நடித்த தன் சக நடிகர் சசிகபூர், விரைவில் நலம் பெற வேண்டும் என பிரபல இந்திப்பட நடிகர் அமிதாப்பச்சன் டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இறைவன் அருளால்...
இது தொடர்பாக டுவிட்டரில் அமிதாப் வெளியிட்டுள்ள பதிவில், ‘மருத்துவமனையில் உடல்நல குறைவால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வரும் சசி கபூர், மீண்டும் தனது பணிகளை வழக்கமாக மேற்கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அவருடன் இருக்க வேண்டும்' என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











