Mohanlal: மலையாள நடிகர் சங்க தேர்தல்.. கிரேட் எஸ்கேப் ஆன மோகன்லால்.. தேர்தல் எப்போது தெரியுமா?
கொச்சி: மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA - Association of Malayalam Movie Artists ) புதிய நிர்வாகிகள் தேர்தல் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்று மோகன்லால் அறிவித்ததைத் தொடர்ந்து, புதிய தலைமைக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஜூலை 17 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர் உட்பட ஆறு முக்கிய பதவிகள் மற்றும் செயற்குழுவில் உள்ள 11 இடங்கள் உட்பட மொத்தம் 17 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நான்கு இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஜூலை 24 வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்குப் பிறகு ஜூலை 31ஆம் தேதி அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மோகன்லால் விலகிய நிலையில், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு மலையாள திரையுலகில் அதிகரித்துள்ளது.
இளம் தலைமுறையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் குஞ்சாக்கோ போபன் மற்றும் மூத்த உறுப்பினர்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றுள்ள விஜயராகவன் ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது என கூறப்படுகிறது. விஜயராகவன் போட்டியில் இருந்தால் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் தலையீடு: பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் பாபுராஜ் போட்டியிட தயாராகி வருவதாகவும், முன்னாள் நிர்வாகியான நடிகை ஸ்வேதா மேனனும் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவர் போட்டியிடுவது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேபோல், தற்போது போக்குவரத்து அமைச்சர் கே.பி. கணேஷ் குமார், தொலைக்காட்சி மற்றும் சீரியல் நடிகர்களின் அமைப்பை கட்டுப்படுத்தி வருவதால், AMMA தேர்தலில் போட்டியிட்டு அங்கும் தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கூட்ட முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கிரேட் எஸ்கேப்: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி ஹேமா கமிட்டி மூலம் சில உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து முந்தைய செயற்குழு ராஜினாமா செய்தது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தற்காலிக குழு ஒன்று நிர்வாகத்தை கவனித்து வருகிறது. தேர்தலை நடத்த பொதுக்குழு எதிர்ப்பு தெரிவித்தாலும், ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும். இளைய தலைமுறையினருக்கும், பெண்களுக்கும் தலைமைப் பதவியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் மோகன்லால் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
டெவினோ தாமஸ்: இளம் நடிகர்களில் டொவினோ தாமஸ், டினி டாம், வினு மோகன், கலாபவன் ஷாஜோன், ஜெயன் சேர்த்தலா, சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் தேர்தலில் களமிறங்க யோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்திய, பிற திரைப்பட சங்கங்களில் பதவி வகிக்காத அம்மா உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள். பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால், 2025ஆம் ஆண்டு அம்மா தேர்தல் சங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும் ஹேமா கமிட்டி விவாகரத்துக்குப் பின்னர் எழுந்த பல கேள்விகளுக்கு தலைவராக இருந்த மோகன்லால் பதில் அளிக்காமல் கிரேட் எஸ்கேப் ஆனார். இந்நிலையில் தலைவராகவும் அவர் போட்டியிடாததால், ஹேமா கமிட்டி விவகாரத்தால் தான் அவர் பின் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











