இந்த வாரம் தியேட்டரில் வெளியான படங்கள்… அடடே ரசிகர்களோட ஆதரவு இந்தப் படத்துக்கு தானா?
சென்னை: நவம்பர் 4ம் தேதியான இன்று 5க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன.
காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம், லவ் டுடே, பனாரஸ் ஆகிய நான்கு படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், இந்த வாரம் வெளியான படங்களில் எதற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.

காஃபி வித் காதல்
சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' படம் பொன்னியின் செல்வன், தீபாவளி ரிலீஸ் போன்றவைகளால் ஒருவாரம் தாமதமாகவே வெளியாகியுள்ளது. ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது சுந்தர் சி-யின் வழக்கமான காமெடி ஜானரில் உருவாகியுள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸிடம் மட்டுமே வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்தம் ஒரு வானம்
அதேபோல், அசோக் செல்வன் நடித்துள்ள 'நித்தம் ஒரு வானம்' படமும் இன்று வெளியாகியுள்ளது. ரா.கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவதா, சிவாத்மிகா ஆகியோர் நடித்துள்ளனர். ஃபீல்குட் படமாக வெளியாகியுள்ள 'நித்தம் ஒரு வானம்' அனைத்து தரப்பு ரசிகர்களுக்குமான படம் என்ற பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஓ மை கடவுளே படம் போல அசோக் செல்வன் கேரியரில் நித்த ஒரு வானமும் கண்டிப்பாக இடம்பெறும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

லவ் டுடே
காஃபி வித் காதல், நித்தம் ஒரு வானம் படங்களைத் தொடர்ந்து ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் 'லவ் டுடே.' கோமாளி படம் மூலம் கவனம் ஈர்த்த பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கியுள்ளதோடு, ஹீரோவாகவும் நடித்துள்ளார். பிரதீப் ரங்கநாதனுடன் சத்யராஜ், இவானா நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். Toxic கண்டென்ட்டாக இருந்தாலும் படம் முழுவதும் செம்ம எண்டர்டெயின்மெண்ட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அடல்ட் கண்டட்டில் காமெடியாக உருவாகியுள்ள லவ் டுடே, 2கே கிட்ஸ்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பனாரஸ்
மேலும், ஜெயதீர்த்தா இயக்கியுள்ள பனாரஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஜையித் கான் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார். காதலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இது பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. டைம் டிராவல் ஜானரில் பேண்டசியாக உருவாகியுள்ள பனாரஸ், எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என சொல்லப்படுகிறது. மேலும், மேக்கிங்கிலும் நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன. ஆகமொத்தம் இந்த வாரம் வெளியான படங்களில் நித்தம் ஒரு வானம், லவ் டுடே, காஃபி வித் காதல் இந்த மூன்றுமே ரசிகர்களுக்கு நல்ல திரை விருந்தாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











