வெப்சீரிஸில் சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதை.. 4 மொழிகளில் உருவாகிறது..பிரபல இயக்குனர் தகவல்
சென்னை: பிரபல சந்தனமரக் கடத்தல் மன்னன் வீரப்பனின் வாழ்க்கை கதை வெப்சீரிஸ் ஆகிறது.
Recommended Video
தமிழகம், கர்நாடகா, கேரளா வனப்பகுதிகளில் ராஜாவாக வலம் வந்தவர் 'சந்தன மரக் கடத்தல் மன்னன்' என அழைக்கப்பட்ட வீரப்பன்.
சுமார் முப்பது வருடத்துக்கும் மேலாக சத்தியமங்கலம் காட்டை மையமாக கொண்டு தனி ராஜ்ஜியமே நடத்தின் வந்தார்.

சிறப்புக் காவல்படை
தமிழக, கர்நாடக, கேரள அரசுகளுக்குப் பெரும் சவாலாக விளங்கிய வீரப்பன், இவர் வனத்துறையினர், போலீஸ், போலீஸ் அதிகாரிகள் உட்பட 184 பேரை கொன்றதற்காகவும் சட்ட விரோதமாக 200க்கும் அதிகமான யானைகளைக் கொன்று தந்தத்தைத் திருடியதற்காகவும் தேடப்பட்டு வந்தவர். கடந்த 2004 ஆம் ஆண்டு, அக்டோபர் 18 ஆம் தேதி, விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ராம் கோபால் வர்மா
இவரது வாழ்க்கை கதையை பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா படமாக இயக்கினார். கன்னடத்தில் உருவான இந்தப் படத்துக்கு கில்லிங் வீரப்பன் என்ற டைட்டில் வைத்திருந்தனர். பின்னர் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானது. சிவராஜ்குமார், சந்தீப் பரத்வாஜ். பாருல் யாதவ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சில விருதுகளைப் பெற்றது.

வீரப்பனாக கிஷோர்
இதையடுத்து வீரப்பனின் வாழ்க்கை கதையை வன யுத்தம் என்ற பெயரில் தமிழ், கன்னடத்தில் உருவானது. இதை ஏ.எம்.ஆர் ரமேஷ் தயாரித்து இயக்கினார். இவர் குப்பி, காவலர் குடியிருப்பு உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இந்தப் படத்தில் கிஷோர் வீரப்பனாக நடித்திருந்தார். அர்ஜூன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அஜயன் பாலா வசனம் எழுதி இருந்தார். இந்தப் படம் அப்போது கவனிக்கப்பட்டது.

வெப் சீரிஸ்
இந்நிலையில் லாக்டவுன் காரணமாக பெரும்பாலான இயக்குனர்கள் வெப் சீரிஸ் பக்கம் திரும்பி இருக்கின்றனர். இதனால், வீரப்பன் கதையும் வெப் சீரிஸ் ஆகிறது. இதை வனயுத்தம் படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்த வெப்சீரிஸ் உருவாக இருக்கிறது. வரும் 23 ஆம் தேதி இதன் டீசரை வெளியிடுகிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

உண்மையான தகவல்கள்
இதுபற்றி இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறும்போது, 'வெப் தொடருக்கு சென்சார் இல்லை என்பதால் பல உண்மையான தகவல்களை வெளிப்படையாகச் சொல்ல முடியும் என்று நம்புகிறேன். கிஷோர், வீரப்பனாக நடிக்கிறார். சம்பத் உட்பட பலர் நடிக்க இருக்கின்றனர். சில இந்தி நடிகர்களிடமும் பேசி வருகிறோம். ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. 12 எபிசோடாக இதை உருவாக்குகிறோம்' என்றார்.


Click it and Unblock the Notifications











