twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு திரைப்பாடல் எப்படி இருக்க வேண்டும்?

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    திரைப்பாடல் நலங்களைப் பற்றி எண்ணற்ற கட்டுரைகள் எழுதவேண்டும் என்பது என் தீராத அவா. 'எவ்வொரு திரைப்படமும் இறுதியில் அதன் பாடல்களாகத்தான் எஞ்சுகிறது,' என்பதும் அசையாத நம்பிக்கைகளில் ஒன்று. இன்று நாம் தியாகராஜ பாகவதரின் படங்களைப் பார்க்கும் தேவையும் நேரமும் பொறுமையும் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் அவருடைய பாடல்களைக் கேட்பதில் நமக்குத் தடையில்லை. பாடல்களைச் சுற்றிப் பின்னியிருக்கும் நம் படங்கள் உலகத் திரைப்பட வரலாற்றாளர்களுக்கு மிகவும் விந்தையாகவும் இருக்கக்கூடும். அதனால்தான் திரைப்படப் பாடல் நலம், அது இடம்பெறும் சூழல், அப்பாடலில் இசையமைப்பாளர் காட்டிய திறம், அதன் கவிநயம், படமாக்கிய இயக்குநரின் வித்தகம் ஆகியவற்றை விளக்கி விவரிக்கும் விதமாகவே 'பாட்டுத்திறம்' என்னும் தமிழ்த்திரைப்படப் பாடல்கள் ஆய்வு நூலை எழுதினேன். இக்கட்டுரையிலும் ஒரு திரைப்படப் பாடலைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

    பதினாறு வயதினிலே திரைப்படத்தில்

    'மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சி
    மெட்டி ஒலிக்க மெல்லச் சிரிச்சி
    எஞ்சோட்டுப் பொண்ணுகளே
    இளம் வாழைத் தண்டுகளே
    வாழைக் குருத்துகளே
    மாமன் மச்சான் தேடிப்புடிங்க..."

    An example for a good film song

    என்னும் பாடலைப் பார்த்திருப்பீர்கள். கேட்டிருப்பீர்கள். ஒரு பாடலை எவ்வளவு கதைச்செறிவோடும் உணர்வுத்தன்மையோடும் ஆக்கி அளிக்க முடியும் என்பதற்கு இப்பாடல் நல்ல சான்று. இப்பாடலை எழுதியவர் ஆலங்குடி சோமு. பாடல் வரிகள் நாட்டுப்புறத் தன்மையோடும் மஞ்சள் நீரூற்று விழாச் சொற்களோடும் கதைச்சூழலைத் தன்னகத்தே கொண்டதாகவும் இருக்கின்றன. நல்ல பல பாடல்களின் இயற்றுநரான ஆலங்குடி சோமு பற்றி பிறிதொரு வாய்ப்பில் விரிவாகக் காண்போம். முதற்பட இயக்குநரான பாரதிராஜா ஆலங்குடியாரிடம் ஒரு பாட்டை எழுதி வாங்கிப் பயன்படுத்தியது வியக்கத்தக்கதே. இதில் இளையராஜாவின் முன்மொழிவு இருக்கக்கூடும்.

    பாட்டு தொடங்குவதற்கு முற்காட்சியில் ஊர்ப்பொலியரான (மைனர்) பரட்டை தம் தோழர்களிடம் மஞ்சள் நீரூற்று விழாவைப் பற்றி உரையாடுகிறார்.

    "நாளைக்கு நம்ம ஊருல யாரும் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையோட நடக்க முடியாது..."

    "ஏன் ஆடிக் காத்து ஆரம்பிச்சிடுச்சா ?"

    "ஏய்... மஞ்சத்தண்ணீ ஊத்தறேன்னு நம்ம ஊருக் குமரிப் பொண்ணுங்க நம்மளச் சும்மா விடமாட்டாளுங்கடா..."

    அடுத்த சட்டகத்தில் பாட்டு தொடங்கும். ஊர்ப் பெண்டிர் பெரிய பெரிய வெண்கலப் போகிணிகளில் தண்ணீரை ஊற்றி மஞ்சட்பொடியிட்டுக் கலக்கிக்கொண்டிருப்பார்கள். மஞ்சள் நீராட்டுவதற்கு ஆள் குளிப்பதற்கு ஆகும் நீரைவிட மிகுதண்ணீர் வேண்டும். அத்தண்ணீரில் மஞ்சள் கரைத்து மாமன் மச்சினர்கள்மீது ஊற்றிவிடுவார்கள். ஊர்த்திருவிழாக்களில் மஞ்சள் நீரூற்று நடக்கும் மூன்றாம் நாளை நான் நன்கறிவேன். ஊரே ஓடிக்கொண்டிருக்கும். அன்றைக்கென்று பார்த்து நல்ல சட்டை வேட்டியாகத்தான் அணிந்திருப்பார்கள். மஞ்சளூற்றுவார்களே என்று கந்தலை அணிய மாட்டார்கள். உடுப்பில் மஞ்சள் கறை படுவது ஆண்மைக்குப் பெருமை. உன் பெண்மை என் ஆண்மையை ஏற்றுக் கொண்டாடுகிறது என்பதற்குச் சான்று. தன்னை விரட்டிய ஆண்மகனை தானும் உரிமையோடு விரட்டும் களிநய விளையாட்டு. படக்காட்சியில் ஊரில் திரியும் ஆண்கள் அனைவர்மீதும் மஞ்சள் நீர் ஊற்றப்படும். கன்னியரும் குமரியரும் வெண்கலச் செம்பில் நீர்மொண்டு தப்பி ஓடிச்செல்லும் ஆடவரைத் துரத்திப் பிடித்து தலைநனைய நீரூற்றிவிடுவார்கள்.

    அவ்வூரின் அழகு மயில்மீது தான்கொண்ட பெருங்காதலால் வாழ்ந்திருப்பவன் சப்பாணி. அவளோ சப்பாணியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஊர் மன்றத்திடையே மஞ்சள் நீரூற்று விழா நடக்கிறது. ஒவ்வொருவரும் தமக்குரிய ஆண்மகனைத் தேடிப்பிடித்து மஞ்சள் நீரூற்றுகிறார்கள். 'பொன்னையா மாசம் என்னையா ?' என்ற வரியின்போது சற்றே முதியவரும் வயிறு தள்ளிய தோற்றத்தினருமான ஒருவர்மீதும் மஞ்சள் நீர் ஊற்றப்படுகிறது. ஒல்லி ஒடுக்கமான ஓர் இளைஞரைக்கூடத் தேடி அமுக்கி நீரூற்றுகிறார்கள். படத்தில் அவ்வொல்லியரான தோற்றத்தில் இளவயது பாக்யராஜ் தோன்றுகிறார். எவள்மீதும் காதல் என்னும் உயர்வழி அன்பைச் செலுத்தத் தெரியாத முரட்டுப் பொலியரான பரட்டைக்கும் மஞ்சள் நீரூற்று நடக்கிறது. பரட்டையைப் போன்ற ஒருவனுக்கு அடிப்பொடியாக வாழும் கௌண்டமணிக்கும் வேட்டி அவிழ்ந்து தவிக்குமளவுக்கு நீரூற்றுவார்கள். படத்தின் எழுத்தோட்டத்தில் கௌண்டமணி என்றே பாரதிராஜா பயன்படுத்தியிருக்கிறார்.

    அங்கே நல்ல சட்டையும் வேட்டியும் அணிந்துகொண்டு நீரூற்றுக்கு அணியமாக நின்றுகொண்டிருக்கும் சப்பாணியை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அவனுக்கோ மயில் பெண்ணாள் தன்னை மதித்து நீரூற்ற வரமாட்டாளா என்ற ஏக்கம். அவள் தெளித்துவிடும் மஞ்சள் தண்ணீரால் இப்பிறவி முழுமைக்குமான தாகவிடாய் தீர்க்கும் தவிப்பில் சப்பாணி அலைபாய்கிறான். மயிலாளுக்கோ அவ்வூருக்குப் புதிதாக வந்த மருத்துவனின் கண்வலைக்குள் சிக்கிக்கொண்ட தவிப்பு. ஊர்க்கிழவிகளாக குருவம்மாளும் வெள்ளையம்மாளும் இக்கொண்டாட்ட அலர்ப்பறைகளைக் கண்டு சிரித்துக்கொள்கின்றனர். ஒரேயொரு பாட்டில் படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களையும் நிறுத்தி, ஓரிரண்டு சுடுவுகளில் அவரவர்களுடைய குணப்பாங்குகளைக் காட்டி, அடுத்து வரும் காட்சித் தொடர்களுக்கு வேண்டிய அசைவுகளை ஏற்படுத்தி இயக்கியிருப்பார் இயக்குநர்.

    ஒரு கட்டத்திற்கு மேல் சப்பாணியே தன் சட்டை முனையைத் தூக்கிக்கொண்டு மஞ்சள் நீர்ச்செம்புகளோடு இருக்கும் பெண்டிரிடம் தனக்கும் நீரூற்றுமாறு செல்வான். ஆனால், அவர்கள் அவனுக்கு ஊற்றுவதுபோல் பாவனை செய்வார்களேயன்றி, ஒரு சொட்டு நீரைக்கூட ஊற்றமாட்டார்கள். 'இந்தச் சப்பாணிக்கும் சபலம் பாருங்க...' என்று எள்ளலாகச் சிரிப்பார்கள். அவர்கள் பார்வையில் அவன் ஆணாகவே இல்லை. மயில்மீது கொண்ட காதல் சப்பாணியின் மூச்சுக் காற்றாயிற்றே. அந்தக் களேபரத்திலும் அவனுடைய கற்பனை அவளை அரசியாக்கிக் காணும். பாட்டின் தாள நடையை இளையராஜா அங்கே நிறுத்துகிறார்.

    'அழகப்பா அழகப்பா ஆணழகன் நீயப்பா...
    மஞ்சக் குளிச்சி அள்ளி முடிச்சு
    மெட்டி ஒலிக்க மெல்லச் சிரிச்சு
    பொன்னில் குடமெடுத்து வண்ண நீரெடுத்து
    என்னாசைக் கண்ணனுக்கு
    எண்ணம்போல நீராட்டுவேன்...!

    தோழியர் புடைசூழ நடுநாயகியாய் இடைமீது ஏந்திய செம்பில் மாவிலையும் மஞ்சள் நீரும் ததும்ப சப்பாணியின் உச்சிகுளிர நீரை ஊற்றுகிறாள். சப்பாணி தலையை உதறிக்கொள்ளும்போது அது வெறும் கனவு என்று அவனுக்குப் புலப்படும். அவனைப் பார்த்து மயிலும் சிரிக்க சப்பாணி தலை கவிழ்வான்.

    ஒரு பாடலென்பது இப்படித்தான் கதையைக் கட்டியிழுத்து அமைய வேண்டும். பாத்திரங்களின் உணர்வுச் சுழல் பார்வையாளர்களிடம் இரக்கக் குமிழிகளைப் பெருக்க வேண்டும். அழிந்துகொண்டிருக்கும் பண்பாட்டுக் கொண்டாட்டங்கள் அடுத்த தலைமுறைக்கு வெறும் கதையாகப் போகலாம். திருக்குறளில் இடம்பெறும் மடலூர்தல் நமக்குத் தெரியாமல் போயிற்றே, அதைப்போல. அப்போது இதைப்போன்ற பாடல் பதிவுகள்தாம் காட்சிச் சான்றுகளாக இருக்கும்.

    English summary
    Mamnja Kulichi... , a song from 16 Vayathinile is the best example for a good film song
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X