மனநோயாளியோட காதல் போராட்டம் தான் குணா.. நண்பர்களின் போராட்டமாக மாற்றிய மஞ்சும்மல் பாய்ஸ்!
சென்னை: சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, மரியம் ஜார்ஜ் ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் மலையாள படமாக இருந்தாலும், தமிழகத்தில் வசூலை அள்ளிவரும் வருகிறது. குணா குகையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், குணா படம் குறித்த தேடல் அதிகரித்துள்ளது.
தமிழ் ரசிகர்களுக்கு பொதுவாக மலையாள படத்தின் மீது ஓர் ஆர்வம் இருக்கும் என்பதால் பலத்திரைப்படங்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வரிசையில் இணைந்துள்ள திரைப்படம் தான் மஞ்சும்மல் பாய்ஸ். வசூலை அள்ளி வரும் இப்படத்தை ரசிகர்கள் சாரை சாரையாக தியேட்டருக்கு படையெடுத்து பார்த்து வருகின்றனர். இப்படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு காதலன் பாடல் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், இன்றைய காலத்து இளசுகளின் பேவரைட் பாடலாக மாறி உள்ளது.

குணா குகை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்த பல ரசிகர்கள் எப்படி கொடைக்கானலுக்கு படையெடுத்து குணா குகையை ரசித்து வருகிறார்களா, அதே போல, கமல்ஹாசன் நடித்த குணா படத்தை எப்படிடா மிஸ் பண்ணோம் என்று அந்த படத்தை இணையத்தில் தேடி பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். கமல் நடித்த ஆளவந்தான் திரைப்படத்திற்கு இன்றைய ரசிகர்களிடம் எப்படி வரவேற்பு இருந்ததோ அதேபோல தற்போது குணா படத்திற்கு இன்றைய டீன் இளைஞர்களிடம் வரவேற்பு இருப்பதால், குணா படம் குறித்து பழைய விஷயத்தை தோண்டி எடுத்து வருகின்றனர்.
மன நோயாளியோட காதல்: அந்த வகையில், குணா திரைப்படம் வெளியான போது, படம் குறித்து கமல் ஹாசன் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், ரொம்ப நாளைக்கு அப்புறமா வித்தியாசமான ஒரு காதல் கதையில நடிச்சிருக்கேன் அந்தக் கதையின் நாயகன் உடைய பெயர் குணசேகரன். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் குணா. அதுதான் படத்தின் பெயர். அவன் தனிவானவன், விசித்திரமானவன், மிகச்சிறந்த சிவசக்தி பக்தன் அவன் மனதை ஒரு எண்ணம் ஆக்கிரமித்தால் எந்த நிலையிலும் அவன் எதையும் செய்வான். அப்படிப்பட்ட ஒரு இளைஞனின் மனதை காதல் ஆக்கிரமிக்கிறது.
காதலில் போராட்டம்: அவனை மனநோயாளியாக உலகம் பார்க்கிறது, ஆனால் அவன் மன நோயாளி அல்ல, யாரும் அவனை புரிந்து கொள்ள தயாராக இல்லை, இந்த உலகத்தில் அவள் ஒருத்தியை தான் மிக தீவிரமாக விரும்புகிறான். அந்த காதலின் போராட்டம் தான் குணா திரைப்படத்தின் கதை.
அழகான நட்பு: பொதுவாக திரைப்படங்களில் மனநோயாளிகளின் கதாபாத்திரத்தை நகைச்சுவைக்காகவோ, வில்லனாகவோ காட்டுவார்கள் ஆனால், தன்னை மனநோயாளியாக நினைத்து ஏளனம் செய்யும் உலகத்தை எண்ணி வருந்தும் ஒரு ஜீவனை இந்த படம் வெளிப்படுத்தும் என்று குணா படத்தில் வரும் குணசேகரன் கதாபாத்திரம் குறித்து கமல் அழகாக பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அழகான அழுத்தமான காதலை சொன்ன குணா திரைப்படம், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் மூலமும், கண்மணி அன்போடு காதலன் பாடல் மூலமாக அழகான நட்பை சொல்லும் படமாக மாற்றி உள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் இப்படத்திற்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











