twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவியத் தலைவன் வசந்த பாலனுக்கு... ஒரு மனம் திறந்த மடல்!

    By Shankar
    |

    -தேனி கண்ணன்

    மரியாதைக்குரிய இயக்குனர் வஸந்த பாலன் அவர்களுக்கு வணக்கம். தமிழ் திரையுலகில் தங்குக்கென்று தனிப்பதை வகுத்து செல்லும் தங்களின் படைப்புகள் போற்றத்தக்கவை. அந்த வகையில் தமிழில் சினிமாவிற்குக்கிடைத்த முக்கியமான படைப்பாளிகள் ஒருவர் நீங்கள். தற்போதும் வெளி வந்திருக்கும் தங்களின் ‘காவியத்தலைவன்' படம் பார்த்தேன். அதில் அசாத்தியமான தங்களின் உழைப்பும், மெனக்கெடலும் பிரமிக்க வைத்தன. நிச்சயம் இந்த படத்திற்கு ஏதாவது ஒரு விருது உங்களுக்குக் கிடைக்கும். அதற்கு என்னுடைய முன் வாழ்த்துகள்.

    An open Letter to Director Vasantha Balan by a critic

    நிற்க... ஒரு சராசரி ரசிகனாக எனக்குள் பல கேள்விகள் எழுந்து தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. இப்படி ஒரு காதல் கதையை சொல்வதர்கு எதற்காக இந்த நாடக உலக பின்னனியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அதுவும் சாரமற்ற, கொஞ்சமும் நேர்மையற்ற காட்சிகளுடன் ஏன் இதைக் காட்ட வேண்டும். இந்தப் படத்தைத் தொடங்குவதற்கு முதலில் கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா பாகவதர் இரண்டு பேரின் காதல் கதையை எடுக்கப்போவதாக சொன்னீர்கள். என்ன நடந்ததோ தெரியவில்லை இப்போது கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டும் சுந்தரம்பாள் என்பதற்கு பதில் வடிவாம்பாள் என்றும் கிட்டப்பா பாகவதர் என்பதற்கு பதில் காளியப்பா பாகவதர் என்று மாற்றி வைத்திருக்கிறீர்கள்.. ஏன் இந்த மாறுவேடம்.? இப்படி எதற்கும் ஒப்பாத படத்தை எடுப்பதற்கு பதிலாக நீங்கள் கேஎ.பி.சுந்தராம்பாளின் வாழ்க்கை வரலாற்றையே எடுத்திருந்தால் இந்த தமிழ்ச் சமூகம் உங்களைக் காலம் உள்ளவரை நினைவில் வைத்திருந்திருக்கும்.

    வெறும் காதல் மட்டுமா சுந்தரம்பாளின் வாழ்க்கை... தங்களுக்கு தெரிந்திருந்தாலும் ஒரே ஒரு சம்பவம் சொல்கிறேன். சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம் காந்தியார் மதாரஸ் வந்திருந்தார். ஹிந்தி பிரச்சார சபாவில் அவர் தங்கியிருந்தபோது தீரர் சத்தியமூர்த்தியோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது மதாராஸில் சுதந்திரப் போராட்டத்தை தீவிரமாக்குவது பற்றி பேச்சு எழுந்திருக்கிறது. சத்தியமூர்த்தி சுந்தராம்பாளின் பாட்டுத் திறனும் அவருக்கு தமிழகத்தில் இருக்கும் செல்வாக்கையும் காந்தியாரிடம் எடுத்துச்சொல்லி அவர் தீவிரமாக சுதேசி பாடல்களை பாடி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை கேள்விபட்ட காந்தியார் கொடுமுடியிலுள்ள கே.பி.எஸ். வீட்டிற்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார். சுந்தராம்பாள் காந்தியாருக்கு தங்கத் தட்டில் உணவிட்டு, வெள்ளித் தம்ளரில் தண்ணீர் கொடுத்ததும், பின்னர் அந்த தட்டையும் தம்ளரையும் காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்துக்கே அன்பளிப்பாகத் தந்ததும் வரலாறு. இப்படி கே.பி.எஸ் வாழ்க்கையில் சினிமாவை மிஞ்சும் நிஜம் நெஞ்சைத் தொடும்..

    ‘ஒருவேளை அதில் வரும் வடிவாம்பாள் கதாபாத்திரம், தானே தேடிச்சென்று எனக்கு பிள்ளை வேண்டும்' என்று கேட்கும் அந்த கட்டம் உங்களுக்குப் பிடித்துப்போனதால் பிடிவாதமாக இந்தப் படத்தை எடுத்தீர்களோ என்னவோ? ,நாங்கள் அவர்களை மனதில் வைத்து எடுக்கவில்லை என்று நீங்கள் இனி சொல்லக்கூடும். அதுதானே கோடம்பாக்கத்தில் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது.

    இன்னொன்று நாடகக் கால வாழ்க்கை என்பதால் பின்னனி இசையை வித்தியாசமாக இருக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் என்னைப் போல பலர் படம் பார்க்க வந்திருந்தார்கள்.

    யாருடைய கதையும் இல்லாமல் இதை வெறும் படமாக வைத்துக்கொண்டால் கூட படத்திற்கு உயிரோட்டமாக இருக்க வேண்டிய இசை தன் பணியைச் சரியாக செய்ததா? பின்னனி இசையிலோ பாடல்களிலோ எங்காவது நாடக சாயலைக் கேட்க முடிந்ததா? ஆர்மோனிய இசை இல்லாத அந்தக் கால நாடகமா? இது போன்ற படங்களுக்கு இதயத்திலிருந்து இசையமைத்திருக்க வேண்டும். ஈ மெயிலில் இசையமைத்தால் இப்படித்தான் இருக்கும். இப்படி ஒரு படத்திற்கு இசை என்றவுடன் கொஞ்சமாவது அந்த கால நாடக உலகை நன்கு அறிந்தவர்களை நினைவு வைத்திருக்கலாமே.. ஏன் அப்படி யாரும் கிடைக்கவில்லையா. சாந்தோம் சாலை பக்கம் போய் பாருங்கள் தமிழ் சினிமாவை தன் விரல்களால் ஆட்டுவித்த எம்எஸ்வி என்ற அந்த கிழட்டு சிங்கம் இப்போதும் ஆர்மோனியமும் கையுமாக உற்சாகத்தோடு உட்கார்ந்திருக்கிறது.

    என் ராசாவின் மனசிலே என்றொரு கிராமியப் படம். அதில் பாரிஜாதப் பூவே என்ற பாடலை அப்படியே பாகவதர் காலத்து பாணியில் போட்டு மனதை மக்கிய இசைஞானி இருக்கும் பிரசாத் ஸ்டுடியோ பக்கம் போயிருக்கலாமே.. அவதாரம் படத்தின் காட்சியைப் பிரதியெடுத்த உங்களால், அந்த அவதாரத்துக்கு உயிர்தந்த இளையராஜா நினைவுக்கு வரவில்லையா...

    அவ்வளவு ஏன்.. யார் மாதிரி மியூசிக் பண்ணனும் ராஜா சார் மாதிரியா இல்ல ரகுமான் மாதிரியா என்று கேட்டு கேட்டு இசையமைத்து தந்த தேவா கூட இந்த நாடகக் கதைக்கு உயிரோட்டமாய் இசை தந்திருப்பாரே!

    இந்த நேரத்தில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வேண்டுகோள். உங்கள் உயரம் வேறு. ஆனால் இது மாதிரியான படைப்புகள் உங்களிடம் வரும்போது முழுக் கவனத்தைச் செலுத்தி இசையமைக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதிலிருந்து விலகி இருப்பதே அந்த படைப்பிற்கு நீங்கள் செய்யும் மரியாதை. அதை விடுத்து நான் லண்டனில் இருக்கிறேன், இங்கிருந்தே இசையமைக்கிறேன் என்பது தொழிலுக்குச் செய்யும் துரோகம். தொழிலுக்கு மட்டுமல்ல எஸ்.எம் சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, இளையராஜா போன்ற ஜாம்பவான்களுக்கு நீங்கள் செய்யும் அவமரியாதையாகவே இருக்கும்.

    வசந்த பாலன் அவர்களே, இது உங்கள் மீதான வசை மாறி என வழக்கம்போல தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கம்... எப்படி வந்திருக்க வேண்டிய படைப்பு இப்படி வந்துவிட்டதே என்ற ஆதங்கம். அவ்வளவுதான்!

    English summary
    An open Letter to Director Vasantha Balan on his recent outing Kaaviyathalaivan by critic Theni Kannan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X