கூலி கொடுத்த பாடம்.. சுற்றி வெளுக்கப்படும் லோகேஷ் கனகராஜ்.. கம்பேக் தர என்ன செய்யலாம்?
சென்னை: லோகேஷ் கனகராஜ் கடைசியாக ரஜினிகாந்த் உள்ளிட்டோரை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்தித்திருந்த அந்தப் படம் கடுமையான ட்ரோலை சந்தித்தது. அதிலும் லோகேஷை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைத்து செய்துவிட்டார்கள். கூலி கொடுத்த ரிசல்ட்டால் அவரது மார்க்கெட் சரிந்துவிட்டது என்பதுதான் எதார்த்தம். அமீர் கானை வைத்து அவர் இயக்குவதாக கூறப்பட்ட படம்கூட ட்ராப் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.
ஸ்ரீ, சந்தீப், ரெஜினா உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் முதன்முதலில் மாநகரம் என்ற படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. படத்தின் கதைக்களம், அதன் மேக்கிங், இயக்குநரின் எதார்த்தமான இயக்கம் என படத்தை பார்த்தவர்கள் இம்ப்ரெஸ் ஆகிவிட்டார்கள். முக்கியமாக இந்த இளைஞருக்கு தமிழ் சினிமாவில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் ஆரூடம் கூறினார்கள்.
பலித்த ஆரூடம்: அதற்கேற்றபடிதான் அவரது இரண்டாவது படம் அமைந்தது. எப்போது ஒரு இயக்குநருக்கு முதல் படத்தைவிடவும் இரண்டாவது படம்தான் பெரிய பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று அனைவருமே எதிர்பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பெயரைத்தான் கைதி லோகேஷுக்கு பெற்றுக்கொடுத்தது. ஒரே இரவில் நடக்கும் கதைக்களம், பத்துக்குள்தான் கதாபாத்திரங்கள், சரியான இடத்தில் ரெட்ரோ பாடலை ப்ளேஸ் செய்தது அதகளம் செய்திருந்தார் அதில். படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி; பெரிய ஹீரோக்களின் பார்வைகளை அவர் மீது திருப்பியது.
உச்சம் சென்ற லோகேஷ்: அந்தவகையில் விஜய்யை வைத்து மாஸ்டர், கமலை வைத்து விக்ரம் படங்களை இயக்கினார். இரண்டுமே ப்ளாக் பஸ்டர்கள்தான். அதேசமயம் மாநகரம், கைதியில் இருந்த லோகேஷ் இதில் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனார். மாஸ் ஹீரோவுக்காக தன்னுடைய கதையிலும், திரைக்கதையிலும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டார். அதேசமயம் அதனை ஈடுகட்டும் விதமாக எல்சியூ என்ற ஒன்றை கொண்டு வந்து கோலிவுட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதனால் அவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கவில்லை ரசிகர்கள்.

சறுக்கிய லோகேஷ்: ஆனால் அந்த எல்சியூ, லோகேஷ் மீதிருந்த ஹைப் ஆகியவைகளே அவருக்கு எதிராக இப்போது அமைய தொடங்கிவிட்டன. மாநகரம், கைதி படங்களில் இருந்த கதை மற்றும் மேக்கிங் அவரது அடுத்தடுத்த படங்களில் மிஸ் ஆக ஆரம்பித்தன. அதிலும் லியோ படத்தில் எல்லாம் வேண்டுமென்றே எல்சியூ, ரெட்ரோ பாடலை வைத்தது போன்ற பிம்பங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. இதனால் லியோவின்போதே லோகேஷை வெளுக்க தொடங்கிவிட்டார்கள்.
கூலி கொடுத்த பெரிய பாடம்: அதன் தொடர்ச்சியாகத்தான் கூலி படமும் அமைந்துவிட்டது. வழக்கமான லோகேஷ் ஸ்டைல் ஆஃப் சினிமா என்றாலும் இதில் ரசிப்பதற்கு ஒன்றுமே இல்லை. ரஜினியால் கொஞ்சம் தாக்குப்பிடிக்க முடிந்தது என்று ஓபனாகவே ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். படம் படுதோல்வியை சந்தித்து பெரிய ட்ரோலை சந்திக்கும் நிலைமை உருவானது.
என்ன பிரச்னை?: முதல் இரண்டு பாடங்களில் அசுர பாய்ச்சலில் சென்றவருக்கு அடுத்தடுத்த படங்களில் என்ன ஆனது என்று கொஞ்சம் ஆராய்ந்தால் எளிதாக ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளலாம். அதாவது கதைக்கு ஏற்ற ஹீரோவையும், விஷயங்களையும் செய்யாமல், ஹீரோவுக்காக கதைகள் செய்வது, தனது ஸ்டைல் கொஞ்சம் அடி வாங்கிவிட்டது என்று தெரிந்தும் அதனை விடாமல் பிடித்துக்கொள்வது போன்றவை புலப்படுகின்றன.
அதிலும் முக்கியமாக மல்டி ஸ்டார் படங்களை செய்கிறேன் என்கிற பெயரில் பான் இந்தியா ஹீரோக்களை வைத்து ஒரு படத்தை ஒப்பேத்திவிடலாம் என்று தீர்க்கமாக அவர் நம்புகிறாரோ என்றுதான் தோன்றுகிறது. உதாரணத்துக்கு லியோவில் சஞ்சய் தத், கூலியில் நாகார்ஜுனா, சௌபின் சாஹிர்,அமீர் கான் என அவரது பார்வை பாலிவுட், டோலிவுட், மல்லுவுட் ஸ்டார்கள் நோக்கியே செல்கின்றன. பத்துக்கும் குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கைதி என்ற சூப்பர் படத்தை கொடுத்தவரோ இப்போது பெரிய ஸ்டார்கள் வந்தாலும் அவர்களை சரியாக ஹேண்டில் செய்வதில்லை. கூலி படத்தின் க்ளைமேக்ஸுக்கு அமீர் கான் எதற்காக என்ற கேள்வியே அதற்கான சாட்சி.
புரிந்துகொள்ளுங்கள் லோகேஷ்: லோகேஷ் கனகராஜ் எதார்த்தமாக படம் எடுப்பதில் சிறந்துதான் விளங்கிக்கொண்டிருந்தார். மாநகரம், கைதி ஆகிய படங்கள் அவற்றை நிரூபிக்கவும் செய்திருக்கின்றன. ஆனால் என்றைக்கு அவர் பெரிய ஹீரோக்களை வைத்து படம் செய்து அதில் இருக்கும் சில சுகங்களை அனுபவிக்க தொடங்கினாரோ அன்றிலிருந்து அவருக்குள் இருந்த சூப்பர் க்ரியேட்டர் இறக்க தொடங்கிவிட்டாரோ என்றுதான் ரசிகர்கள் மத்தியில் கேள்விகளாக எழ ஆரம்பித்திருக்கின்றன. லோகேஷ் கண்டிப்பாக கம்பேக் கொடுக்க வேண்டும். அதற்கு மாநகரம், கைதி போன்ற நேட்டிவிட்டியோடு லாஜிக் மீறல்கள் அதிகம் இல்லாத; ஹீரோக்களுக்காகவும், பான் இந்தியா ஸ்டார்கள் இறக்குமதிக்காகவும் கதை செய்யாமல் இருக்க வேண்டும். கைதி 2 அவருக்கான கம்பேக்காக அமைய வேண்டுமென்றால், முதல் இரண்டு படங்களில் இருந்த இயக்குநரைத்தான் மீண்டும் தனக்குள் கொண்டு வர வேண்டும் என்ற லோகேஷ் கனகராஜ் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











