புல்லரிக்குதே.. அப்பா எப்பவுமே உன் கூடத்தான் இருப்பேன்டா படவா.. நாகேஷ் பேச.. எமோஷனலான ஆனந்த் பாபு!
சென்னை: விஜய் டிவியின் முத்தழகு வீட்ல விசேஷம் நிகழ்ச்சியில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த பாபுவை பெருமைப்படுத்தும் விதமாக விருது வழங்கப்பட்டது.
அந்த விருதை வழங்குவதற்கு முன்னதாக போட்டோவாக இருக்கும் மறைந்த நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ் உயிர்த்தெழுந்து பேசுவது போல உருவாக்கப்பட்ட போட்டோ அனிமேஷன் வீடியோ ரசிகர்களை மட்டுமின்றி நாகேஷின் மகனையும் எமோஷனல் ஆக்கி விட்டது.

தனக்கு 2வது வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும், இதனை தான் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்றும் டிஸ்கோ ஸ்டாராக சினிமாவில் ஒரு காலத்தில் கலக்கி வந்து தற்போது சீரியல்களில் அப்பா கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் ஆனந்த் பாபு கூறியுள்ள ப்ரோமோ வீடியோ தற்போது தீயாக பரவி வருகிறது.
நாகேஷை மறக்க முடியுமா?: தமிழ் சினிமாவின் நகைச்சுவை தரத்தை உயர்த்தி எண்ணற்ற ரசிகர்களை தனது உடல் மொழியாலும் காமெடி திறமையாலும் சிரிக்க வைத்த நாகேஷை எப்போதுமே மக்கள் மறக்கமாட்டார்கள். நாகேஷின் மகன் ஆனந்த பாபு டி. ராஜேந்தர் இயக்கிய தங்கைக்கோர் கீதம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தனது நடன திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக சினிமாவில் பெரிதாக ஜொலிக்க முடியாமல் முடங்கி விட்டார்.
ஆதவன் படத்தில்: சூர்யாவின் ஆதவன் படத்தில் மீண்டும் ஆனந்த் பாபு கம்பேக் கொடுத்து கலக்க ஆரம்பித்தார். தனியாக ஒரு படத்தையும் இயக்கி வந்தார். ஆனால், சினிமாவில் சரியான கம்பேக் கொடுக்க முடியாத சூழலில் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய ஆனந்த் பாபு மெளனராகம், மெளனராகம் 2, கிழக்கு வாசல் என பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார். நடிக்க ஆரம்பித்து 40 ஆண்டுகளை கடந்த ஆனந்த் பாபுவை விஜய் டிவியின் சின்னத்திரை கலைஞர்கள் அங்கீகரித்து விருது வழங்கி உள்ளனர்.

மகனுடன் பேசிய நாகேஷ்: வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக மறைந்தவர்கள் எல்லாம் மீண்டும் பேசும் அதிசயம் நடைபெற்று வருகிறது. போட்டோ அனிமேஷன் மூலமாக ஆனந்த் பாபுவுக்கு நடிகர் நாகேஷ் வாழ்த்து சொல்லும் விதமாக அப்பா எப்போதும் உன் கூடத்தான் இருக்கேன்டா படவா, எப்போதும் போல கலக்கு என பேச, அதை பார்த்த ஆனந்த் பாபு எமோஷனலாகி கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்.
எமோஷனலான ஆனந்த் பாபு: இது எனக்கு கிடைத்துள்ள இரண்டாவது வாய்ப்பு இதை சரியாக பயன்படுத்தி எங்கப்பா சொன்னது போல சாதித்துக் காட்டுவேன். இதைவிட சிறப்பான பரிசு எனக்கு கிடைக்காது. எங்க அப்பாவை எனக்காக பேச யோசித்து இதனை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











