ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் ஆனிவர்சரி.. திருமணத்தை அலங்கரித்த ஹாலிவுட் பிரபலங்கள்!
மும்பையில் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி, சிறுவயது நண்பர்களான ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சண்ட்டும் வாழ்க்கையில் ஒன்றிணைந்தனர். மலர் அலங்காரங்களுடன் கூடிய திருமண பந்தல், கவர்ச்சியான வரவேற்பு நிகழ்ச்சிகள், மனப்பூர்வமான வாழ்த்துக்கள், மகிழ்ச்சியான பிரியாவிடை என ஒவ்வொரு தருணமும் ஆடம்பரத்தை மிஞ்சியது. அன்பு மற்றும் கலாச்சார செழுமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த திருமணம் அமைந்தது. ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் இரண்டு இதயங்கள் இணைந்த நிகழ்வு மட்டுமல்ல, உலகின் மிக முக்கியமான ஆளுமைகளை ஈர்த்த ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.
ஜாம்நகரில் நடைபெற்ற மூன்று நாள் கொண்டாட்டங்கள், தில் தடக்னே தோ பாணியில் கப்பல் பார்ட்டி, மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடந்த 'சுப் விவா' வரை, ஒவ்வொரு கொண்டாட்டமும் கனவு போல் இருந்தது. ஆனந்த்-ராதிகா திருமண கொண்டாட்டத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது இணையத்தில் வைரலானது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் தம்பதியினர் ஜூலை 12, 2025 அன்று முதல் திருமண நாளைக் கொண்டாடுகிறார்கள். இந்தத் தருணத்தில், இந்தியாவின் பிரமாண்ட நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த உலகப் பிரபலங்களை நினைவு கூர்வோம்.
வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு என அனைத்து திசைகளிலிருந்தும் பிரபலங்கள் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தில் கலந்து கொண்டனர். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஒரே இடத்தில் நடனம் ஆடி கொண்டாடினர். ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் மற்றும் ராம்சரண் மேடையில் ஆடியதை ரசிகர்கள் ஒருநாளும் மறக்கமாட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த திருமண விழாவில் குடும்பத்தோடு பங்கேற்றார்.
சங்கீத் மேடை முதல் திருமண பந்தல் வரை, ஒவ்வொரு இடமும் உலகளாவிய பிரசித்தி மற்றும் கலாச்சாரத்தின் கலவையாக இருந்தது. இந்த திருமணத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பாவின் பல ஆடம்பர நிகழ்வுகள் நடைபெற்றன. இந்திய மற்றும் சர்வதேச பிரபலங்களான ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி மற்றும் ரிஹானா போன்றோரின் கலை நிகழ்ச்சிகளும் களைகட்டின.
அரங்கை அதிரவைத்த ரிஹானா: கடந்த மார்ச் 2024-ல் ஜாம்நகரில் நடந்த ஆனந்த்-ராதிகாவின் திருமண வரவேற்பு விழாவில் ரிஹானா தனது நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார். மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடையை அணிந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நடனமாடினார். பாலிவுட் பாணியில் நடன அசைவுகளை செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். "டைமண்ட்ஸ்" மற்றும் "வி ஃபவுண்ட் லவ்" போன்ற பாடல்களுக்கு நடனமாடியதுடன், அம்பானி குடும்பத்தினருடனான அவரது கனிவான உரையாடல்கள் மற்றும் இந்திய விருந்தோம்பலுக்கு அவர் அளித்த பாராட்டுக்கள் அனைவரின் இதயங்களையும் வென்றன.

கேட்டி பெர்ரி, பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ் மற்றும் பிட்புல் இசை நிகழ்ச்சி: மும்பையில் பிரமாண்டமான திருமண வாரம் நடைபெறுவதற்கு முன்பு, அம்பானி குடும்பத்தினர் இத்தாலி மற்றும் பிரான்ஸ் முழுவதும் ஒரு ஆடம்பரமான கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தனர். பிரெஞ்சு ரிவியராவில் இரவு பார்ட்டியில் கேட்டி பெர்ரி தனது இசை நிகழ்ச்சியால் அனைவரையும் மகிழ்வித்தார். Backstreet Boys 90-களின் நினைவுகளை கண்முன் கொண்டு வந்தனர். அமெரிக்க ராப்பர் பிட்புல் தனது அதிரடி இசை நிகழ்ச்சியால் கப்பலை ஒரு மிதக்கும் இரவு விடுதியாக மாற்றினார்.
ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சி: திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. 'Baby 'மற்றும் 'Peaches' போன்ற பாடல்களைப் பாடி தனது இசை திறமையை வெளிப்படுத்தினார். அவர் விருந்தினர்களுடன் நடனமாடிய வீடியோக்கள் சில நிமிடங்களில் உலகளவில் வைரலாகின. இது ஒரு திருமண நிகழ்ச்சி மட்டுமல்ல, உலகளாவிய பாப் இசையை இந்திய விழாக்களோடு கலந்த ஒரு முழுமையான இசை அனுபவமாக இருந்தது.
கர்தாஷியன் சகோதரிகளின் வருகை: கிம் கர்தாஷியன் மற்றும் க்லோ கர்தாஷியன் சகோதரிகள் மணீஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த லெஹங்கா ஆடையில் இந்தியாவுக்கு வந்தது ஒரு ஃபேஷன் ஷோ போல் இருந்தது. இந்திய பாரம்பரிய நகைகளை அணிந்து மெஹந்தி மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கிம் அணிந்திருந்த தங்க எம்பிராய்டரி புடவை அனைவரையும் கவர்ந்தது. இது மேற்கத்திய மற்றும் இந்திய பாரம்பரியத்தை ஒன்றிணைத்தது.
ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் இரண்டு நபர்களின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்தியா தனது கலாச்சாரத்தை உலகிற்கு காட்டிய தருணம். உலகமும் அதை ஆச்சரியத்துடனும், மரியாதையுடனும் பார்த்து வியந்தது.


Click it and Unblock the Notifications











