விஜய் தேவரகொண்டா சொன்னதால் தான் அப்படியெல்லாம் பேசுகின்றனர்... பிரபல நடிகை புலம்பல்
ஹைதராபாத்: சமுத்திரகனி நடித்துள்ள விமானம் திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
இந்தப் படத்தில் புஷ்பா திரைப்பட புகழ் அனசுயா பரத்வாஜ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனசுயா, விஜய் தேவரகொண்டா பற்றி காட்டமாக பேசியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா குறித்து அனசுயா பரத்வாஜ் பேசியது வைரலாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா தான் காரணம்
சின்ன திரையில் முகம் காட்டியதன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை அனசுயா பரத்வாஜ். தெலுங்கில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களையும் தொகுத்து வழங்கி வந்தார். அதன்பின்னர் 2016 முதல் சினிமாவில் பிஸியாகிவிட்ட அனசுயா, தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் வில்லன் சுனிலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சமுத்திரகனியின் விமானம் படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த 9ம் தேதி வெளியான நிலையில், அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனசுயா விஜய் தேவரகொண்டா குறித்து பேசியது வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில், தானும் விஜய் தேவரகொண்டாவும் நீண்ட காலமாக நல்ல பிரண்ட்ஷிப்பில் இருந்து வருகிறோம். இதுவரை எங்களுக்கிடையே எந்த பிரச்சினையும் வந்தது கிடையாது. ஆனால், அர்ஜுன் ரெட்டி திரைப்படம் வெளியான போது, அதனை தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து விஜய் தேவரகொண்டா பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் படத்தில் அவர் பேசிய சில மோசமான வசனங்கள் மியூட் செய்யப்பட்டன.
ஆனால், அவரோ அந்த வசனங்களை பேசுமாறு தனது ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்தார். அதனால் அவர்களும் அந்த வசனத்தை சத்தமாக பேசி மக்களுக்கு இடையூறு செய்தனர். இந்தச் சம்பவம் இரண்டு குழந்தைகளுக்கு தாயான எனக்கு வேதனையைக் கொடுத்தது. அதனால் இதுகுறித்து விஜய் தேவரகொண்டாவிடம் பேசியபோது, தயவுசெய்து நிஜ வாழ்க்கையில் ரசிகர்களுக்கு இதுமாதிரி வசனங்களை பேச ஊக்குவிக்க வேண்டாம் என்றேன்.

இதனையறிந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இப்படி நடப்பது தெரிந்தும் விஜய் தேவரகொண்டா இதனை கட்டுப்படுத்தாமல் இருந்தார். மேலும் அவருடன் பயணிக்கும் ஒருவர் தொடர்ந்து என்னை பற்றி மோசமாக விமர்சித்து வருகிறார். இது அனைத்தும் விஜய் தேவரகொண்டாவுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவர் தான் சிலருக்கு பணம் கொடுத்து அவர்களை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் அனசுயா பரத்வாஜ். இந்தச் சம்பவம் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











