நானும் தான் அன்புச்செழியனிடம் கடன் வாங்குகிறேன், அவரை மிகைப்படுத்தி சித்தரிக்கிறார்கள்: விஜய் ஆண்டனி
Recommended Video

சென்னை: அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது என்று நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியாமல் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்திற்கு அன்புச்செழியன் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அசோக் குமார்
நடிகர் திரு. சசிகுமார் அவர்கள், மிகவும் சிறந்த இயக்குனர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் திரு. அசோக் குமார் அவர்களின் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். திரு. அசோக் குமார் அவர்கள் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு விட்டு, தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.

மிகைப்படுத்தி
நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் திரு. அன்புச் செழியனிடம் பணம் வாங்கித் தான் படங்கள் எடுத்து வருகிறேன். வாங்கிய பணத்தை முறையாக திரும்ப செலுத்தியும் வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில் தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது.

கடன்
திரைப்படத் துறையில் 99% தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கி படம் எடுத்து தான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.
திரு. அசோக் குமார் அவர்களின் மரணம் தற்கொலையின் கடைசி மரணமாக இருக்க வேண்டும்.

வேதனை
நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம், எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக் கொண்டிருக்கிறேன். RIP- திரு. அசோக் குமார் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











