Vijay - Pawan Kalyan: விஜயின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பவன் கல்யாண்.. மேடையிலேயே மாஸ் பண்ணிட்டாரே!
ஹைதராபாத்: நடிகர்கள் அரசியலில் காலடி எடுத்து வைப்பது என்பது தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் ஒருங்கிணைந்த ஆந்திராவிலும் புதியது அல்ல. இதற்கு எம்.ஜி.ஆர் தொடங்கி என்.டி.ஆர், கடைசியாக விஜய் வரை பலரும் உள்ளார்கள். இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் தனது அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய்க்கு ஆந்திராவின் துணை முதலமைச்சராக உள்ள ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண் - விஜய்: தனது கட்சி நிகழ்ச்சியில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை தனது தோளில் அணிந்து கொண்டு, தனது கட்சிக் கொடியை மேடையில் தாங்கியபடி நிற்கிறார். அப்போது அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் ஆரவாரம் செய்கிறார்கள். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
வாக்குகளாக மாறுமா?: ஆந்திராவில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம், அவர்கள் வாக்குகளைக் கவர தான் பவன் கல்யாண் இவ்வாறு செய்துள்ளார் என்று பலரும் இந்த வீடியோவைப் பார்த்த பின்னர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். பவன் கல்யாணுக்கு தமிழ்நாட்டில் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள், இப்படி இருக்கையில் அது விஜய்க்கு வாக்குகளாக மாறும் அளவுக்கு கை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். அதே நிலமைதான் பவன் கல்யாணுக்கும்.

பவனின் பாசம்: விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து பவன் கல்யாண் தான் அவ்வப்போது விஜய் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த சம்பவமும் இணைந்துள்ளது. மொத்தத்தில் இந்த சம்பவம் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து தமிழ்நாட்டில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்றது. அதாவது 2024ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் மற்றொன்று ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல். ஆனால் இந்த இரண்டிலும் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்கவில்லை. கடந்த ஆண்டு ஒரு மாநாடு, கடந்த வாரத்தில் ஒரு மாநாடு என கட்சி தொடங்கி ஒன்றரை வருடங்களில் இரண்டு மாநாடுகளை நடத்தி முடித்துள்ளார்.
தேர்தல்: ஆனால் இந்த இரண்டு மாநாட்டிலும் அவர் அரசியலாக, கொள்கையாக, கருத்தியலாக எதுவுமே பேசவில்லை என்று அரசியல் தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மாநாடு தொடங்கி தனது கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பு என பல இடங்களில் 2026இல் திமுக மற்றும் தவெகவுக்கு இடையில் தான் போட்டியே என்று தெரிவித்து வருகிறார். ஆனால் திமுக தரப்பில் விஜய்க்கு சவால் விடும் படி எதுவும் செய்யாமல், ஆட்சியை நடத்தி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 7 முதல் 8 மாதங்கள் இருப்பதால் விஜய் தேர்தல் அரசியலை எவ்வாறு கையாள்வார் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











