தீ விபத்தில் உயிர் தப்பிய மகன்.. திருப்பதியில் முடி காணிக்கை செய்த பவன் கல்யாணின் மனைவி!
சென்னை: சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த தனது மகன் உடல்நிலை தேறியதற்காக ஏழுமலையான் கோவிலில் மொட்டை போட்டு தலை முடி காணிக்கையாக செலுத்தினார் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி.
நடிகரும், ஜன சேனா கட்சித்தலைவரும், ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாணின் மகன் மார்க் ஷங்கர், சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், கடந்த 8 ஆம் தேதி அந்த பள்ளியில் தீ விபத்து நேரிட்டது. இதில் பத்து வயது மாணவி தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், பவன் கல்யாணின் 7 வயது மகனான மார்க் ஷங்கருக்கு கை மற்றும் கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும், அவன் புகையை சுவாசித்தால், நுரையீரலும் பாதிக்கப்பட்டது.

பவன் கல்யாண் மகன்: இதையடுத்து, மார்க் ஷங்கருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்தில் பற்றி தகவல் அறிந்த பவன் கல்யாண் அவசரமாக விமானத்தில் சிங்கப்பூர் விரைந்தார். பவன் கல்யாண் உடன் அவரது அன்னா லெஷ்னேவா, நடிகர் சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா ஆகியோரும் சென்றனர். மார்க் ஷங்கரின் உடல்நிலை ஓரளவிற்கு குணமடைந்ததை அடுத்து, மகனை பவன்கல்யாண், ஹைதராபாத்துக்கு அழைத்து அழைத்து வந்தார்.

முடி காணிக்கை: இதையடுத்து, பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஷ்னேவா கொனிடேலா, திருமலை கோவிலில் வெங்கடேசப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு, முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். தனது மகன் மார்க் ஷங்கர், தீ விபத்தில் சிக்கிய தகவல் வந்ததும், மகனை நல்லபடியாக மீட்டுத்தரவேண்டும் என, அன்னா வேண்டுதல் வைத்துள்ளார். அந்த வேண்டுதல் நிறைவேறியதால், மகனை காப்பாற்றியதற்கு, அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். அன்னா முதலில் ஸ்ரீ வராஹ ஸ்வாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, பிறகு தீர்த்தப் பிரசாதத்தை பெற்றுவிட்டு, பின் பத்மாவதி கல்யாண மண்டபத்திற்குச் சென்றார், அங்கு அவர் மற்ற பக்தர்களுடன் தனது தலைமுடியை காணிக்கையாக பெருமாளுக்கு கொடுத்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பவன் கல்யாணம் திருமணம் செய்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











