வெள்ளத்தில் தத்தளித்த ஆந்திரா.. ஓடோடிச் சென்று உதவி செய்த சிம்பு.. தமிழில் நன்றி சொன்ன பவன் கல்யாண்
ஆந்திரா: ஒட்டுமொத்த இந்தியாவுமே இப்போதுதான் கேரளாவில் நடந்த வயநாடு நிலச்சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் ஆந்திராவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் மீண்டும் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறும் அளவிற்கு இயற்கையின் கோரதாண்டவம் அமைந்தது. அப்பாவி மக்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியும், அதனால் ஏற்பட்ட விளைவுகளினாலும் தங்களது உயிரினை இழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். ஆந்திரா வெள்ள பாதிப்புகள் தொடர்பாக இணையத்தில் உலாவரும் வீடியோக்களைப் பார்க்கும்போதே, நெஞ்சம் பதறுகின்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு ஆந்திரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 3 லட்சம் நன்கொடை வழங்கினார். இதற்கு ஆந்திரா மாநில, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிம்புவுக்கு தமிழில் நன்றி கூறியுள்ளார்.
ஆந்திர மாநில வெள்ள பாதிப்புகள், கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்முன் கொண்டு வந்தது எனக் கூறும் அளவிற்கு இருந்தது. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகளின் முதற்கட்ட மதிப்பீட்டின்படி தோராயமாக ரூபாய் 6,880 கோடி இருக்கும் எனவும், அதில் 2.06 லட்சம் ஹெக்டேரில் விவசாயப் பயிர்களும், 19,686 ஹெக்டேரில் தோட்டக்கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி, ஏலூர், கிருஷ்ணா, என்டிஆர், குண்டூர், பாபட்லா மற்றும் பல்நாடு ஆகிய 7 மாவட்டங்கள் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விஜயவாடா நகரில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் அதிகளவு நீர்வரத்து ஏற்பட்டு, புடமேரு ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சென்றது.
மீட்புக் குழு: வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்க, ஆறு ஹெலிகாப்டர்கள் மற்றும் 212 படகுகள், 32 மண் அள்ளும் ஜே.சி.பி இயந்திரங்கள், 188 டிப்பர்கள் மற்றும் டேங்கர்கள், 59 ஆளில்லா விமானங்கள் என மொத்தம் 26 NDRF, 22 SDRF மற்றும் இரண்டு கடற்படைக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த தகவலை மாநில அரசு அதிகாரிகள் மத்திய குழுவிடம் தெரிவித்தபோது ஊடக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நிவாரணம் - சீரமைப்பு: இதில், ஆளில்லா விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற வாகனங்களைப் பயன்படுத்தி, மொத்தம் ஒரு கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 410 உணவுப் பொட்டலங்கள், ஒரு கோடியே 12 லட்சத்து 91 ஆயிரத்து 296 தண்ணீர் பாட்டீல்கள், 35 லட்சத்து 18 ஆயிரத்து 819 பால் மற்றும் 46 லட்சத்து 78 ஆயிரத்து 212 பிஸ்கட் பாக்கெட்டுகள், 4 லட்சத்து 23 ஆயிரத்து 800 முட்டைகள், டன் கணக்கில் காய்கறிகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் 2 லட்சத்து 6 ஆயிரத்து 770 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டன என ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தினால் ஏற்பட்ட 8 ஆயிரத்து 692 டன் திடக்கழிவுகள் 7 ஆயிரத்து 88 தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

சிம்பு- நன்றி: இப்படியான நிலையில் தெலுங்கு சினிமா நடிகர்கள் ஆந்திரா அரசுக்கு பல கோடிகளை நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் இருந்து யாருமே உதவாத நிலையில் நடிகர் சிம்பு ரூபாய் 3 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். அவருக்கு ஆந்திரா மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தமிழில் நன்றி தெரிவித்துள்ளார். அதில், " ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் சிலம்பரசனுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











