Andrea - நானே வெட்கப்படல அவர் ஏன் வெட்கப்படணும்?.. என்ன ஆண்ட்ரியா பொசுக்குனு இப்படி சொல்லிட்டாங்க
சென்னை: தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கமல் ஹாசன் உள்ளிட்டோருடன் ஜோடி போட்ட ஆண்ட்ரியா அடுத்ததாக பிசாசு 2 படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறார். இந்த சூழலில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா ஆரம்பத்தில் பாடகியாக அறியப்பட்டவர். அந்நியன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடியவர். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார் ஆண்ட்ரியா.

நடிகையான ஆண்ட்ரியா: பாடகியாக பிரபலமான ஆண்ட்ரியா கண்டநாள் முதல் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு ஓரளவு பேசப்பட்டது. இதனையடுத்து இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சரத்குமார், ஜோதிகா உள்ளிட்டோர் நடித்து கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. இந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது.
செல்வராகவன் ஹீரோயின்: இதனையடுத்து சில வருடங்கள் நடிக்காமல் பாடுவதில் கவனம் செலுத்திய ஆண்ட்ரியா செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். வரலாற்று ஆராய்ச்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்ற ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவனில் சிறந்த நடிப்பை வழங்கினார். அந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி பாடல் பாடவும் செய்தார். ஆயிரத்தில் ஒருவனில் நடித்த பிறகு அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன.
முன்னணி நடிகை: அதன்படி அஜித் நடித்த மங்காத்தா, கமல் நடித்த விஸ்வருபம், உத்தம வில்லன், ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, சுந்தர் சி நடித்த அரண்மனை என ஏராளமான தமிழ் படங்களிலும், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட மலையாள படத்திலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
வடசென்னை ஆண்ட்ரியா: ஆண்ட்ரியாவின் கரியரிலேயே முக்கியமான படம் வடசென்னை. அமீரின் மனைவியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில்; தனது கணவரை கொன்றவர்களை பழிவாங்குவதற்காக காத்திருப்பதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தையெல்லாம் தனக்காக மாற்றிக்கொள்வதும் என ஆண்ட்ரியாவின் நடிப்பு வடசென்னை படத்தின் ப்ளஸ்களில் ஒன்றாகும். இப்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆண்ட்ரியா பேட்டி: இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "வடசென்னை படத்தில் நடித்தபோது ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதற்கு கூச்சப்பட்டார். அப்போது, ஒரு பெண் நானே வெட்கப்படவில்லை. இவர் ஏன் வெட்கப்படுகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் லவ் சீன்களில் நடித்த அனுபவம் இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











