Aneethi Trailer: வெளியானது அநீதி ட்ரெய்லர்... சைக்கோபாத் கேரக்டரில் மிரட்டும் அர்ஜுன் தாஸ்!
சென்னை: ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன்.
வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் என சிறப்பான படங்களை இயக்கியுள்ள அவர், தற்போது அநீதி படம் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார்.
அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அநீதி வரும் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெளியானது அநீதி ட்ரெய்லர்: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் அசிஸ்டெண்டாக இருந்து இயக்குநராக அறிமுகமானவர் வசந்தபாலன். இவரது முதல் படமாக 2002ம் ஆண்டு வெளியான 'ஆல்பம்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், வெயில் திரைப்படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் வசந்தபாலன்.
அதனைத் தொடர்ந்து அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவைகளில் அங்காடித் தெரு, காவியத் தலைவன் படங்களும் ரசிகர்களிடம் சிறப்பான அங்கீகாரம் பெற்றன. ஆனால், கடைசியாக வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான 'ஜெயில்' திரைப்படம் பெரிதாக வெற்றிப் பெறவில்லை.
இந்நிலையில் கம்பேக் கொடுக்கும் விதமாக வசந்தபாலன் இயக்கியுள்ள திரைப்படம் அநீதி. அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த அநீதி, வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அநீதி ட்ரெய்லரில் ஃபுட் டெலிவரி பாய் கேரக்டரில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ், சைக்கோத்தனமாக மிரட்டுகிறார். இதன் மூலம் இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. அதேபோல், வசனங்களிலும் கவனம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. "இந்தியா முழுவதும் தனியார்மயம் ஆகிட்டே போறத பார்த்தா, இனிமேல் இந்தியா பிரைவேட் லிமிடெட்ன்னு போர்டு வச்சிடுவாங்க போல" என்ற வசனம் அதிக கவனம் ஈர்த்துள்ளது.
இதுவரை மென்மையாக கதைக்களத்தில் எளிய மக்களின் வாழ்வியலை பேசியவர் வசந்தபாலன். ஆனால், முதன்முறை சைக்கோ ஜானரில் அநீதி படத்தை இயக்கியுள்ளார். இதனால் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அநீதி படத்தின் ட்ரெய்லருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











