கையும் இல்ல.. மகளும் கஷ்டப்படுகிறாள்.. ஊசி போட்டு கொன்னுடுங்க - கதறி துடிக்கும் அங்காடித் தெரு நடிகை
சென்னை: கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் அங்காடித் தெரு பட நடிகை தன்னுடைய பரிதாப நிலை குறித்து வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.
கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன். ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் அடுத்ததாக இயக்கி வெயில், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்ட வெற்றி பெற்ற அங்காடித் தெரு
வசந்தபாலனின் படங்களிலேயெ அங்காடித் தெருவுக்கு தனி இடம் உண்டு. சென்னை தி.நகர் என்றாலே ஷாப்பிங்கிற்கான இடம் என பலரும் நினைத்திருந்த சூழலில் அங்கு வேலை செய்யும் எளிய மக்கள் எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் என்று அப்பட்டமாக சொல்லிய படம் அங்காடித் தெரு. மகேஷ், அஞ்சலி, ப்ளாக் பாண்டி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் இவர்களுடன் சிந்து என்ற நடிகையும் நடித்திருந்தார். மாற்றுத்திறனாளி ஒருவரை திருமணம் செய்து தி.நகரில் பிழைப்பு நடத்தும் கதாபாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். அந்தக் கதாபாத்திரமும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

கேன்சரால் அவதிப்படும் சிந்து
அங்காடித் தெரு படத்துக்கு பிறகு ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் நடித்தார் சிந்து. ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சிந்து கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி பலரையும் பரிதாபம் கொள்ள செய்திருக்கிறது.

சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்கவில்லை
எனக்கு கடந்த 2020ஆம் ஆண்டு கேன்சர் வந்தது. அதனால் எனது மார்பகங்கள் அகற்றப்பட்டன. அன்றிலிருந்து நாட்டு மருத்துவம், ஆங்கில மருத்துவம் என வைத்தியத்தை மாறி மாறி பார்த்துவருகிறேன். ஆனாலும் மீள முடியவில்லை. மருத்துவர்களை நான் குறை சொல்லவில்லை. என் உடல்தான் ஒத்துழைக்கவில்லை.

ஒரு கை எனக்கு செயல்படவில்லை
கேன்சர் பாதிப்பில் நான் அவதிப்படுவதை பார்த்த நிறைய நண்பர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள். அவர்கள் தயவால்தான் நான் சாப்பிடுகிறேன். அவர்களும் எத்தனை நாள்களுக்குத்தான் உதவுவார்கள். அவர்களுக்கு பாரமாகயிருக்க வேண்டாம் என நினைத்து மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். அப்போது கையில் வளையல் போடும் சூழல் உருவானது. ஆனால் அது ஒத்துக்கொள்ளாமல் அலர்ஜியாகி எனது கை வீங்கியது. தற்போது எனது இடது கை சுத்தமாக செயல்படவில்லை.

தஞ்சாவூரில் நாட்டு வைத்தியம்
இதற்கிடையே தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில் ஒரு மாதம் தங்கி நாட்டு வைத்தியம் பார்த்தேன். அப்போது எனது மார்பகங்களில் இருந்த புண்கள் ஆறின. ஆனால் அந்த சமயத்தில்தான் எனது மருமகன் இறந்துவிட்டார். இதனால் சென்னை வந்துவிட்டேன். கேன்சர் பாதிப்பு கண்டறியப்பட்டதும் மூன்று ஆண்டுகள் ஓய்வு எடுக்க சொன்னார்கள். ஆனால் நான் உழைத்தால்தான் எனது குடும்பத்தால் சாப்பிட முடியும். பின்னர் எங்கிருந்து ஓய்வு எடுப்பது.

விஷ ஊசி போட்டு என்னை கொன்றுவிடுங்கள்
எனது மகளும் எந்த வேலையும் இல்லாமல் கை குழந்தையுடன் கஷ்டப்படுகிறார். அவரையும் நான் பார்த்துக்கொள்கிறேன். தினம் வலியால் துடிப்பதற்கு பதில் எனக்கு விஷம் ஊசி போட்டு கொன்றுவிடுங்கள் என டாக்டர்களிடமும் கேட்டுப்பார்த்துவிட்டேன். முதலமைச்சர் ஸ்டாலின் எனது சிகிச்சைக்கும், எனது மகளுக்கு ஒரு அரசு வேலையும் கொடுத்தால் நன்றாக இருக்கும். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை; பிறகு ஏன் கடவுள் எனக்கு இப்படி ஒரு வலியை கொடுக்கிறார் என தெரியவில்லை. வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் சாப்பாட்டிற்கே நான் கஷ்டப்படுகிறேன்" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











