கருணை கொலையாவது பண்ணிடுங்கன்னு கெஞ்சினாரே.. அங்காடித் தெரு சிந்து கடைசி நேரத்தில் அனுபவித்த வேதனை!
சென்னை: இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து மார்பக புற்றுநோய் பாதிப்பு காரணமாக இன்று அதிகாலை 2.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 44.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த சிந்து கடந்த சில ஆண்டுகளாகவே கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

சிகிச்சைக்கு திரையுலக பிரபலங்கள் உதவுமாறு வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பிரபலங்கள் சிந்துவின் சிகிச்சைக்கு உதவ முன் வந்திருந்தனர். ஆனால், கடைசியில் எதுவும் பலனளிக்காமல் போக சிந்துவின் உயிர் பிரிந்து விட்டது.
அங்காடித் தெரு சிந்து: இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான அங்காடித் தெரு படத்தில் மகேஷ், அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிலையில், துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை சிந்து.
குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் தலைகாட்டிய சிந்து சில படங்களில் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே வறுமையில் வாடி வந்த சிந்துவுக்கு வாழ்வில் ஏகப்பட்ட கொடுமைகளும், வலிகளும், சோகங்கள் மட்டுமே நிறைந்து இருந்தது தான் வேதனை.
14 வயதில் திருமணம்: சிறுமியாக இருக்கும் போதே சிந்துவுக்கு 14 வயதிலேயே அவரது வீட்டில் திருமணம் செய்து வைத்து விட்டனர். அதே ஆண்டு ஒரு குழந்தையையும் பெற்று விட்ட நடிகை சிந்து கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மீண்டும் அப்பா வீட்டுக்கே வந்து விட்ட சோகமும் தனது குழந்தையை காப்பாற்ற போராடியதையும் சமீபத்திய வலி நிறைந்த பேட்டிகளில் கூறியிருந்தார்.
கருணை கொலை பண்ணிடுங்கன்னு கெஞ்சல்: மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அங்காடித் தெரு சிந்துவின் ஒரு பக்க மார்பே கசாப்பு கடையில் கறியை வெட்டி எடுப்பது போல மருத்துவர்கள் வெட்டி எடுத்து விட்டனர் என சில மாதங்களுக்கு முன்பாக அளித்த பேட்டியில் கண்ணீர் விட்டு அழுது பேசியது, பலரது நெஞ்சையே பதைபதைக்க செய்தது.
இப்படி வலியுடனும் வேதனையுடனும் தான் வாழ விரும்பவில்லை என்றும் கருணை கொலை செய்து விடுங்க என்றும் கெஞ்சி வந்தார் நடிகை சிந்து.
அதிகாலை காலமானார்: இந்நிலையில், இன்று அதிகாலை 2.15 மணிக்கு அவர் இயற்கை எய்தியதாக அவரது சினிமா நண்பர்களும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். நடிகர் கொட்டாச்சி தனது சமூக வலைதள பக்கத்தில் இதை கனத்த இதயத்துடன் பதிவிட்டுள்ளார்.
அங்காடித் தெரு பாண்டி உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிகை சிந்துவின் மறைவுக்கு கண்ணீர் விட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











