வில்லங்கத்தில் முடிந்த காஜல் அகர்வாலின் வினோத ஆசை
ஹைதராபாத்: மலைப் பாம்பு வீடியோவால் காஜல் அகர்வால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால் தனது குடும்பத்தாருடன் தாய்லாந்துக்கு சென்றுள்ளார். விடுமுறையை கழிக்கச் சென்ற இடத்தில் அவர் மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டபடி எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
என்ன ஒரு அனுபவம் என்று தலைப்பிட்ட அந்த வீடியோவால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

காஜல்
காஜல் அகர்வாலின் வீடியோவை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் கோபம் அடைந்துள்ளனர். விலங்குகளை கொடுமைப்படுத்தலாம் என்பதை ஊக்குவிக்கிறீர்களா என்று ஆர்வலர்கள் காஜலிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆசையாக போட்ட வீடியோவால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று காஜல் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

சர்கஸ்
பீட்டாவின் சர்கஸுக்கு எதிரான பிரச்சாரத்தை துவங்கி வைத்தவர் காஜல் அகர்வால். அப்படிப்பட்டவர் இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருக்கிறார். அவர் இப்படி செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாக உள்ளது என்கிறார்கள் விலங்குகள் நல ஆர்வலர்கள். பீட்டா ஆதரவாளரிடம் இருந்து இப்படி ஒரு வீடியோவா என்கிறார்கள்.

மனிதர்கள்
கூண்டில் அடைத்து வைப்பதால் பாம்புகள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றன. சுதந்திரமாக இருக்க வேண்டிய பாம்புகளை மனிதர்களின் பொழுதுபோக்கு பொருளாக பயன்படுத்துகிறார்கள். காஜலின் வீடியோவை பார்க்கும் அவரின் ரசிகர்களும் அவரை போன்று செய்யத் தான் நினைப்பார்கள். என்ன செய்கிறோம் என்பதில் பிரபலங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஹைதராபாத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் பாயல் குரானா தெரிவித்துள்ளார்.

த்ரிஷா
முன்னதாக வெளிநாட்டு ரிசார்ட்டில் டால்பினுக்கு முத்தம் கொடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்ட த்ரிஷாவை விலங்குகள் நல ஆர்வலர்கள் விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரபலங்கள் ஏன் விலங்குகளை கொடுமைப்படுத்தும் விஷயத்தை ஆதரிக்கிறார்கள் என்று அவர்கள் குமுறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











