எல்லா பொருத்தமும் இருக்கு.. அதற்கு அவர் நச்சுனு பொருந்துவார்.. சூர்யா பற்றி அனிமல் இயக்குநர் ஓபன்
மும்பை: அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சந்தீப் ரெட்டி வங்கா கடைசியாக அனிமல் படத்தை இயக்கியிருந்தார். ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் அண்மையில் வெளியாகி மோசமான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் படத்துக்கு வணிக ரீதியாக வரவேற்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா சூர்யா குறித்து பேசியிருக்கிறார்.
தெலுங்கில் மெகா ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சந்தீப் ரெட்டி வங்கா. சேது படத்தின் அப்டேட் வெர்ஷன் என்று அந்தப் படம் கூறப்பட்டாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்களை சேர்த்தது. அந்தப் படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக்கானது. அந்தப் படத்துக்கு பிறகு ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி உள்ளிட்டோரை வைத்து சந்தீப் இயக்கிய படம் அனிமல். இந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு ரிலீஸானது.

கடும் விமர்சனம்: படம் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். படத்தில் அதீத வன்முறை காட்சிகள், ஆணாதிக்கம் என பல எதிர்மறையான விஷயங்கள் இருப்பதாக ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக படம் பெருத்த அடியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதாம். உலகம் முழுவதும் 800லிருந்து 900 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
செலிபிரிட்டிகளும் விமர்சனம்: படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களே கடுமையான விமர்சனத்தை கொடுத்தனர். பாடக்ர் ஸ்ரீநிவாஸ், 'அனிமல்களுக்காக எடுக்கப்பட்ட படம்தான் அனிமல்' என்று கூறியிருந்தார். அதேபோல் நடிகை ராதிகாவும் மறைமுகமாக அனிமலை விமர்சித்திருந்தார். அவர்கள் வரிசையில் கங்கனா ரணாவத்தும் தனது பங்குக்கு, 'பெண்களின் கண்ணியத்தை போக்கும்வகையில் சமீபத்திய படங்கள் வெளியாகின்றன' என்று குறிப்பிட்டிருந்தார். இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் 6 பிலிம்பேர் விருதுகளை அள்ளியிருக்கிறது அனிமல் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இயக்குநர் சந்தீப் ரெட்டிக்கு தாதா சாகேப் விருதும் வழங்கப்பட்டது.
சந்தீப் ரெட்டி வங்கா பேட்டி: இந்நிலையில் சந்தீப் ரெட்டி வங்கா சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவரிடம் அனிமல் படத்திற்கு தமிழ் சினிமாவிலிருந்து எந்த நடிகை தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எந்த யோசனையும் இல்லை. சூர்யாதான். அவர் கண்டிப்பாக அனிமல் படத்துக்கு நன்றாகவே பொருந்துவார் என்றார்.
ரசிகர்கள் அச்சம்: இதனைப் பார்த்த சூர்யா ரசிகர்கள் அய்யய்யோ சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்கு சந்தீப் ரெட்டி தூண்டில் போடுகிறாரோ என்று அச்சத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக புறநானூறு, ஹிந்தியில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கவிருக்கிறார். வாடிவாசல் படத்தின் நிலை என்ன ஆனதென்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











