அதுக்குள்ள எண்ட் கார்டா?.. 2023 இறுதியில் எதிர்பார்க்கப்படும் டாப் 5 பெரிய படங்கள்.. செம லிஸ்ட் இதோ!
சென்னை: தீபாவளிக்கு வெளியான படங்களிலேயே ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் தான் பலரது பாராட்டுக்களை அள்ளி வசூல் குவித்து வருகிறது. கூடவே ரிலீஸான கார்த்தியின் ஜப்பான், கிடா மற்றும் விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ரெக்கார்டு படைக்காமல் காலி இருக்கைகளுடன் காணாமல் போனது.
இந்நிலையில், இத்துடன் 2023ம் ஆண்டு அவ்ளோ தான் என்றும் பொங்கலுக்கு தான் இனிமே படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்ல வேண்டும் என ரசிகர்கள் அதற்குள் அவசரப்பட்டு எண்ட் கார்டு போட்டு விட வேண்டாம் என வரிசையாக பல படங்கள் இந்த வாரம் முதல் டிசம்பர் இறுதி வரை வெளியாக படையெடுத்துள்ளன. அதில், முக்கியமான பெரிய படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்..

துருவ நட்சத்திரம்: கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம், ரிது வர்மா, விநாயகம், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் தாமதமாக ரிலீஸ் ஆனாலும், படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

அனிமல்: அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பப்லு பிரித்விராஜ் நடித்துள்ள அனிமல் திரைப்படம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

அன்னபூரணி: அதே டிசம்பர் 1ம் தேதி நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படமும் வெளியாகிறது. இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரான நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சத்யராஜ், ஜெய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். அய்யங்கார் வீட்டுப் பெண் அசைவ உணவு சமைக்கும் சாம்ராஜ்யத்தை ஆரம்பிக்கும் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சலார்: இதுவரை வந்த லிஸ்ட் எல்லாம் மேட்டரே இல்லை என்கிற அளவுக்கு டிசம்பர் இறுதியில் வெளியாக உள்ள பிரபாஸின் சலார் படத்துக்கு தான் ஒட்டுமொத்த ஹைப்பே உள்ளது. கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் நடித்துள்ள சலார் படத்தில் யஷ் கேமியோ ரோலில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

டன்கி: சலார் படத்துக்கு ஒரு நாள் முன்பாகவே ஷாருக்கானின் டன்கி திரைப்படம் வெளியாகிறது. டிசம்பர் 21ம் தேதி ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கவுஷல் நடித்துள்ள டன்கி படம் வெளியாகிறது. இந்த ஆண்டு பதான், ஜவான் என தொடர்ந்து 1000 கோடி வசூலை ஈட்டிய ஷாருக்கான் ஹாட்ரிக் அடிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இந்த படம் பான் இந்தியா படம் இல்லை என்பதாலும் சலார் படத்துடன் மோதுவதாலும் வசூலில் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறுகின்றனர். இந்த படங்களை தவிர மேலும் சில படங்களும் இந்த இரு மாதங்களில் வெளியாக உள்ளன. சந்தானத்தின் 80ஸ் பில்டப், சதீஷின் காஞ்சுரிங் கண்ணப்பன் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் துருவ நட்சத்திரம் படத்துடன் போட்டிப் போட காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











