தாதாசாகேப் பால்கே விருதுகள்: அனிமல் வில்லன் முதல் அனிருத் வரை.. மாஸ் காட்டிய நயன்தாரா.. இதோ லிஸ்ட்!
மும்பை: பிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியில் அனிமல் படம் 6 விருதுகளை அள்ளியது. ஆனால், ஜவான் படத்துக்கு ஒரே ஒரு விருது மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், நேற்று இரவு நடைபெற்ற தாதாசாகேப் பால்கே விருது விழா நிகழ்ச்சியில் அனிமல் மற்றும் ஜவான் படங்களுக்கு சமமாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 12த் ஃபெயில் உள்ளிட்ட படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
மஞ்சள் நிற சேலையில், நயன்தாரா அழகு மிளிர நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பாலிவுட் பிரபலங்களின் மொத்த கண்களையும் பறித்து விட்டது என்றே சொல்லலாம். சிறந்த இசையமைப்பாளராக பாலிவுட் படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்: தாதாசாகேப் பால்கே விருதுகள் 2024 நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் வென்றார். கடந்த ஆண்டு பதான், ஜவான் மற்றும் டங்கி என 3 சிறந்த படங்களில் நடித்த ஷாருக்கான் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸையும் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கடந்த ஆண்டு திருப்பிக் கொண்டு வந்திருந்தார். பிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்ட நிலையில், தாதாசாகேப் பால்கே விருதுகள் நிகழ்ச்சியில் ஷாருக்கானுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சகர்கள் தேர்வு செய்த சிறந்த நடிகர் விருது விக்கி கவுஷலுக்கு சாம் பஹதூர் படத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகை நயன்தாரா: ஷாருக்கானுக்கு ஜவான் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்ட நிலையில், ஜவான் படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. நர்மதா எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா அந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். பொதுவாக பாலிவுட் நடிகைகள் விருது விழா என்றாலே கவர்ச்சியான உடைகளை அணிந்து வருவார்கள். ஆனால், நயன்தாரா சேலை அணிந்து சென்றது பல பாலிவுட் பிரபலங்களின் பார்வைகளை பறித்திருக்கிறது.
சிறந்த இயக்குநர்: அட்லீ உள்ளிட்ட இயக்குநர்கள் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால், சிறந்த இயக்குநர் விருது அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்காவுக்குத்தான் சென்றது. பிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியில் அனிமல் 6 விருதுகளை அள்ளினாலும் சிறந்த இயக்குநருக்கான விருது அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், தாதாசாகேப் விருது விழாவில் சிறந்த இயக்குநர் விருதை வென்றுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா.
சிறந்த வில்லன்: சந்தீப் ரெட்டி வங்காவை தொடர்ந்து சிறந்த வில்லனுக்கான விருதை அனிமல் படத்தின் வில்லன் பாபி தியோல் வென்றுள்ளார். ஜவான் படத்தில் நடித்த விஜய்சேதுபதி, பதான் படத்தில் நடித்த ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் சிறந்த வில்லன்களுக்கான நாமினேஷனில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவார்டு வாங்கிய அனிருத்: கடந்த ஆண்டு ஜவான், லியோ என தமிழ் சினிமாவில் தாறுமாறாக இசையமைத்த அனிருத் பாலிவுட்டுக்கு அட்லீ மூலம் சென்ற நிலையில், "வந்த இடம் என் காடு.. புகுந்து விளையாடு" என பாட்டுப் போட்டிருந்தார். ஜவான் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கு சென்றுள்ளது.
கே.ஜே. யேசுதாஸ்: இசைத்துறையில் பல ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை ஆற்றியவர் விருது பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு வழங்கப்பட்டது. அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கான மரியாதையை செலுத்தினர்.


Click it and Unblock the Notifications











