Anirudh: முதலில் தனுஷ்... இப்போ சிவகார்த்திகேயன்... டீலில் விட்ட அனிருத்... பின்னணி என்ன?
சென்னை: தனுஷின் 3 திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.
குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.
அனிருத்தின் ஆரம்ப காலத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரும் தான் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுத்தனர்.

ஆனால், தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரது படங்களுக்கும் அனிருத் இசையமைக்க மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷ், சிவகார்த்திகேயனை பிரியும் அனிருத்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 படம் மூலம் மியூசிக் டைரக்டராக அறிமுகமானவர் அனிருத். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல் அனிருத்தை பட்டித் தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதனைத் தொடர்ந்து அடுத்த பத்தே ஆண்டுகளில் கோலிவுட்டின் டாப் 5 இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருகிறார் அனிருத்.

முக்கியமாக அனிருத்தின் ஆரம்பகால கேரியரில் தனுஷும் சிவகார்த்திகேயனும் தான் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தனர். தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். ஆனால், VIP, மாரி படங்களின் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைக்கவில்லை. அப்போதே தனுஷ் - அனிருத் இடையே மோதல் என சொல்லப்பட்டது.
ஆனால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்தது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், விரைவில் தனது 50வது படத்தை தொடங்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அனிருத் முடியாது என மறுத்துவிட்டாராம்.
அதேபோல், இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயனின் படத்திற்கும் இசையமைக்க அனிருத் நோ சொல்லிவிட்டதாக தெரிகிறது. 3 படத்தில் காமெடியனாக நடித்த சிவகார்த்திகேயன், அதன்பின்னர் எதிர் நீச்சல் படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தனுஷ் தயாரித்த இந்தப் படத்திற்கு அனிருத் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது தொடங்கிய சிவா - அனிருத் நட்பு மேலும் பல படங்களில் இணைந்தது.

சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் ஆகிய படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். தனுஷின் 3 உட்பட மொத்தம் 7 படங்களில் இந்தக் கூட்டணி மாஸ் காட்டியது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்திற்காக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், அவரோ நோ சொலிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர், தலைவர் 170, கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ, அஜித்தின் ஏகே 62, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படம், இந்தியில் ஷாருக்கானின் ஜவான் என பிஸியாக உள்ளார் அனிருத். இதுபோக இன்னும் சில படங்களில் ஏற்கனவே கமிட் ஆகிவிட்டாராம். அதனால், கால்ஷீட் பிரச்சினையால் தான் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களை அனிருத் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், கவின் நடிக்கும் லோ பட்ஜெட் படத்திற்கு அனிருத் ஓக்கே தெரிவித்துள்ளது, தனுஷ் தரப்பை டென்ஷனாக்கி உள்ளதாம். சிவகார்த்திகேயனுக்கும் இதே வருத்தம் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாப் ஹீரோக்கள் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருவதால், தனுஷ், சிவகார்த்திகேயன் இருவரையும் அனிருத் டீலில் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











