ராக் ஸ்டார் அனிருத்திற்கு பிறந்த நாள்.. வாழ்த்து சொன்ன முன்னணி இயக்குநர்கள்!
சென்னை : ரசிகர்களால் ராக் ஸ்டார் என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் அனிருத் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
தமிழ் சினிமா தவிர்க்க முடியாத அளவிற்கு இசையமைப்பாளராக அனிருத் தனது தடத்தை பதித்து விட்டார். இன்றைய தலைமுறை இசை ரசிகர்களிடையே செல்வாக்கையும் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார் அனிருத்.
சிறு வயதிலேயே இசைப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கிவிட்ட அனிருத் பள்ளி, கல்லூரியில் இசைக் குழுக்களில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர். லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியிலும் பியானோ இசை கற்று தேர்ச்சி பெற்றார்.

அனிருத்
பல இடங்களில் வாய்ப்பு தேடி அலைந்த அனிருத்திற்கு தனுஷ் 3 படத்தில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார். அந்த படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. குறிப்பாக நடிகர் தனுஷ் எழுதி பாடிய 'ஒய் திஸ் கொலவெறி டி' சர்வதேச அளவில் வெற்றி பெற்று உலகம் முழுவதையும் அனிருத்தை திரும்பி பார்க்கவைத்தது. இதையடுத்து, மெலடி, மேற்கத்திய இசையமைப்பு, ஃபாஸ்ட் பீட் பாடல், குத்துப் பாடல் என அனைத்து வித்தைகளையும் தனது படத்தில் போட்டு தாக்கினார்.

இந்த ஆண்டு ஹிட் பாடல்
அஜித், விஜய்,ரஜினிகாந்த்,கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும், அனிருத் இசையில் பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து, காத்து வாக்குல ரெண்டு காதல் டூ டூ டூ டுட்டு டுட்டு பாடல், வசூலை வாரிக்குவித்த விக்ரம், சிவகார்த்திகேயனின் டான், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படங்களின் பாடல்கள் பலரது விருப்ப பாடல்களாகவே மாறிவிட்டன.

இனிமையான மனிதர்
இந்நிலையில், இயைமைப்பாளர் அனிருத் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமில்லாது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பூமியில் மிகவும் இனிமையான, அழகான,அன்பான மனிதர் நீங்கள். உங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் உண்டு என, அனிருத்துடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐ லவ் யூ டா
அதே போல இயக்குநர் அட்லியும் அனிருத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனிருத் என்றும், ஐ லவ் யூ டா என்றும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் தடம் பதித்துள்ள அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்திற்கும் அனிருத் தான் இசை அமைந்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

ஜெயிலர் படத்தில்
அனிருத் தற்போது, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ரஜினி நடித்துவரும் ஜெயிலர் திரைப்படம், அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் திரைப்படம், கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2-ஆம் பாகம், அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் உட்பட பல படங்களுக்கு அனிருத் இசை அமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











