அனிருத் செம ஃபார்ம்ல இருக்காரு போல.. அடுத்து அந்த பெரிய ஹீரோவுக்கு இசையமைக்கப்போறாராம்
சென்னை: கோலிவுட்டின் நம்பர் 1 இசையமைப்பாளராக இப்போதைக்கு இருப்பவர் அனிருத். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் என வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் அவர் ஹிந்தியிலும் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்துக்கு இசையமைத்து கோலிவுட்டில் அறிமுகமானார். இது தவிர்த்து தெலுங்கிலும் இசையமைத்தார். இந்தச் சூழலில் அனிருத் அடுத்ததாக இன்னொரு பெரிய ஹீரோவின் படத்துக்கு இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஜினிகாந்த்தின் உறவினரான அனிருத் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி தனுஷ் ஹீரோவாக நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் படத்தின் இடம்பெற்ற பாடல்களும் பின்னணி இசையும் சக்கைப்போடு போட்டன. அதனால் முதல் படத்திலேயே அனிருத் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். முக்கியமாக ஒய் திஸ் கொலவெறி டி பாடல் இந்தியா முழுவதும் ஒலித்தது.

வந்த வாய்ப்புகள்: 3 பட இசையின் வெற்றிக்கு பிறகு அனிருத்துக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் இசையமைத்த வணக்கம் சென்னை, டேவிட், எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, கத்தி, வேதாளம் என வரிசையாக ஹிட்டடித்தன. அனிருத்தின் இசை ஒவ்வொரு படத்திலும் புது புது ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்தது. இதனால் குறுகிய காலத்திலேயே அனிருத் டாப் 10 இசையமைப்பாளர்கள் லிஸ்ட்டுக்குள் வந்துவிட்டார். மேலும் கண்டிப்பாக இன்னும் பல வருடங்களுக்கு அனிருத் ரூல் செய்வார் என்ற ஆரூடமும் பலரால் கூறப்பட்டது.
ஹிந்தியிலும்:அதன்படியே கொஞ்சம் கொஞ்சமாக அனிருத் காட்டில் மழை அடிக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் பெரிய ஹீரோக்களே அனிருத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். அதேபோல் தமிழில் மட்டும் கோலோச்சியிருந்த அனிருத்; அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படத்தில் இசையமைத்து ஹிந்தியில் அறிமுகமானார். அந்தப் படமும், பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அநேகமாக தமிழ், தெலுங்கு போல் ஹிந்தியிலும் அவர் தனது தடத்தை தொடர்ந்து பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் விமர்சனம்: அனிருத் இசை எவ்வளவுக்கு எவ்வளவு கொண்டாடப்படுகிறதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்திப்பவை. அவரது பாடல்களிலும், பின்னணி இசையிலும் வெறும் சத்தம் மட்டும்தான் இருக்கிறது என்று ஒருதரப்பினர் சொல்வார்கள். ஆனாலும் அனிருத்துக்கு வாய்ப்புகள் வந்தபடிதான் இருக்கின்றன. அடுத்ததாக அவரது இசையமைப்பில் கூலி, ஜெயிலர் 2, விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. சம்பளமும் 10 கோடி ரூபாய்க்கு மேல் அவர் வாங்குவதாக கூறப்படுகிறது.
சிரஞ்சீவி படத்துக்கு: அனிருத் ஏற்கனவே தெலுங்கில் தேவரா படத்தின் முதல் பாகத்துக்கு இசையமைத்தார். இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தசரா படத்தை இயக்கிய ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி தயாரிப்பில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க படக்குழு விரும்புவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் டோலிவுட் வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கவனித்த ரசிகர்கள் தமிழ், ஹிந்தி போல் தெலுங்கிலும் பெரிய ஹீரோக்கள் படத்தை அனிருத் கைப்பற்ற ஆரம்பித்துவிட்டாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











