அஞ்சான்... 3 நாளில் ரூ 30 கோடி... சூர்யாவின் கேரியரில் இது புது சாதனை!
சென்னை: விமர்சனங்கள் ஒருபக்கமிருந்தாலும், சூர்யாவின் அஞ்சான் பட வசூல் சாதனை தொடர்கிறது. முதல் மூன்று நாட்களில் இந்தப் படம் ரூ 30 கோடியைக் குவித்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா ஜோடியாக நடித்த அஞ்சான் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

1400 அரங்குகள்
சூர்யாவின் படங்களிலேயே அதிக அரங்குகள்.. அதாவது 1400 அரங்குகளில் வெளியான முதல் படம் அஞ்சான். தமிழகத்தைப் பொறுத்தவரை முதல் ஒரு வாரத்துக்கு இந்தப் படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. பிரமாண்ட பப்ளிசிட்டி காரணமாக படத்துக்கு ஏக எதிர்ப்பார்ப்பு.

ரூ 30 கோடி
இதனால் முதல் மூன்று நாளும் அஞ்சான் திரையிடப்பட்ட இடங்களில் திருவிழாக்கோலமாகத்தான் இருந்தது. இதனால் முதல் நாள் மட்டும் ரூ 11.5 கோடியை வசூலித்த அஞ்சான், மூன்றாம் நாள் முடிவில் ரூ 30 கோடியை வசூலித்துள்ளதாம்.

தயாரிப்பாளர் அறிவிப்பு
படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சூர்யா நடித்த அஞ்சான் படம் வசூலில் புது சாதனைப் படைத்துள்ளது.

முதல் மூன்று தினங்களில்...
தமிழகம் மற்றும் கேரளாவில் இந்தப் படம் மொத்தம் ரூ 30 கோடியை வசூலித்துள்ளது, முதல் மூன்று தினங்களில். இதுவரை இல்லாத புதிய வசூல் சாதனை இது. முதல் வாரத்தில் பல வசூல் சாதனைகளை அஞ்சான் மிஞ்சும் என நம்புகிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











