அஞ்சானுக்கு அடி.. நான் முதலில் சிக்கினேன்.. 3 மாதங்கள் ரொம்பவே கஷ்டம்.. லிங்குசாமி பிரத்யேக பேட்டி
சென்னை: ஆனந்தம், ரன், சண்டக்கோழி என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்த லிங்குசாமி; சூர்யாவை வைத்து இயக்கிய அஞ்சான் திரைப்படத்தில் படுதோல்வியை சந்தித்தார். அந்தப் படத்துக்கு பிறகு அவரால் இன்னொரு ஹிட் படத்தை கொடுக்கவே முடியவில்லை. சூழல் இப்படி இருக்க அஞ்சான் படம் நாளை ரீ ரிலீஸாகிறது. இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.
தமிழ் சினிமாவில் நல்ல இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் லிங்குசாமி. தனது முதல் படமான ஆனந்தம் படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து கவனம் ஈர்த்த அவர் அடுத்ததாக ரன், சண்டக்கோழி என கமர்ஷியல் படங்களை இயக்கினார். இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. முக்கியமாக சாக்லேட் பாய் இமேஜில் இருந்த மாதவனை ரன் படம்தான் கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியது. அதேபோல் விஷாலுக்கும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
அடி வாங்கிய லிங்குசாமி: நன்றாக போய்க்கொண்டிருந்த லிங்குசாமியின் கரியர் ஜி படத்தி சின்ன சறுக்கலை சந்தித்தது. ஆனால் அஞ்சான் படத்தில் மொத்தமாக படுத்துவிட்டது. அப்படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக கொடுத்திருந்த பேட்டியில், "கத்துக்குட்ட மொத்த வித்தையையும் இதில் இறக்கியிருக்கேன்" என்று ஒரு வார்த்தையை சொல்லிவிட்டார். அதுமட்டுமின்றி அஞ்சான் படத்தில் சூர்யாவின் கெட்டப்பெல்லாம் செம மாஸாக இருந்தது.

படம் படுதோல்வி: ஆனால் ரசிகர்களுக்கு படம் முழு திருப்தியை கொடுக்கவில்லை. அந்த ஒட்டுமொத்த ஏமாற்றத்தையும், கோபத்தையும் லிங்குசாமி மீது இறக்கி வைத்துவிட்டார்கள். ஒருகட்டத்தில் எல்லை மீறி அவரை கிண்டல் செய்யவும் தொடங்கிவிட்டார்கள். சோஷியல் மீடியா வளர்ந்துவந்த காலகட்டம் அது. அப்போதே அந்த அடி அடித்தார்கள். அஞ்சான் கொடுத்த மோசமான அனுபவத்தை அவர் வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டார் என்பதே உண்மை.
ரீ ரிலீஸ்: இந்நிலையில் அஞ்சான் படம் நாளை ரீ ரிலீஸாகிறது. ஏற்கனவே ரிலீஸானபோது 2 மணி நேரம் 36 நிமிடங்கள் இருந்த படத்தை ரீ ரிலீஸில் 2 மணி நேரமாக குறைத்து ரிலீஸ் செய்கிறார்கள். படத்தில் இருந்த சூரியின் போர்ஷனையும் தூக்கிவிட்டார்கள். கண்டிப்பாக இந்த முறை அஞ்சான் நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை லிங்குசாமியிடம் இருப்பதாகவே தெரிகிறது. சூழல் இப்படி இருக்க ஃபில்மிபீட் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார் அவர்.
லிங்குசாமி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், " படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இந்த பத்து வருடங்களில் நிறைய பேர் என்னிடம், 'சார் எனக்கு அஞ்சான் படம் பிடிக்கும் சார்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் சூர்யாவின் ரசிகர்களுக்கும் படம் கனெக்ட் ஆகியிருந்தது. நான் என்னவெல்லாம் நினைத்து செய்தேனோ அதெல்லாம் இவர்களுக்கு கனெக்ட் ஆகியிருக்கிறதே என்று தோன்றும். அதேமாதிரி நிறைய குட்டி பசங்களுக்கு படம் பிடித்திருக்கிறது என்று அவர்களது பெற்றோர் சொல்வார்கள்.
வடக்கில் ஹிட்: அஞ்சான் கேரளா, மும்பையில் எல்லாம் நன்றாக போனது. எனவேதான் சில மைனஸ்களை எல்லாம் சரி செய்து ரீ ரிலீஸ் செய்கிறோம். இந்தப் படத்துக்கு பெரிய பட்ஜெட். அப்போது ரிலீஸ் தேதி ஃபிக்ஸ் செய்து படம் செய்ததால் நினைத்த மாதிரி படத்தை எடுக்க முடியவில்லை. இந்த ரீ ரிலீஸ் எங்களது சந்தோஷத்துக்காகவும், சூர்யா மீது இருக்கும் மரியாதைக்காகவும், சூர்யாவின் ரசிகர்களுக்காகவும்தான்.
நாம்தான் ஃபர்ஸ்ட்: அஞ்சான் படத்துக்கு முன்னதாக திருப்பதி பிரதர்ஸ் கம்பெனி தொடர்ந்து ஹிட் கொடுத்தது. அப்படி இருக்கும்போது தொடர் வெற்றிகூட ஒரு பொறாமை, கோபத்தை சிலருக்கு ஏற்படுத்தும். அந்த கோபத்தின் வெளிப்பாடாக சில விஷயங்கள் நடக்கும். அப்போதுதான் சோஷியல் மீடியா வளர்ந்த நேரம். அதில் அடி வாங்கியதில் நாம்தான் ஃபர்ஸ்ட். அப்படி எல்லோரும் பேசியது என்னை மூன்று மாதம் ரொம்பவே பாதித்துவிட்டது. ஆனால் குடும்பம், குருநாதர், நண்பர்கள் எல்லாம் நன்றாக இருந்ததால் என்னால் நிற்க முடிந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











